உலகில் அதிக மாசடைந்த நகர பட்டியலில் முதலிடம் பிடித்த லாகூர் நகரம்

2 months ago 14

லாகூர்,

உலகில் அதிக மாசடைந்த நகரங்கள் பற்றிய பட்டியலில், பாகிஸ்தானின் லாகூர் நகரம் மீண்டும் முதலிடம் பிடித்து உள்ளது. இந்நகரின் காற்று தரக்குறியீடு 708 ஆக உள்ளது. உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள வருடாந்திர பாதுகாப்பு எல்லை அளவை விட 86 மடங்கு அதிக காற்று மாசுபாட்டால் லாகூர் நகரம் சிக்கி தவித்து வருகிறது.

இதனால், லாகூர் நகரின் லட்சக்கணக்கான மக்களின் சுகாதாரம் பாதிப்புக்குள்ளாவது அதிகரித்துள்ளது என அந்நாட்டில் இருந்து வெளிவரும் டான் பத்திரிகை தகவல் தெரிவித்து உள்ளது. லாகூர் நகரின் கடுமையான காற்று மாசுபாடு என்பது பருவகாலத்தில் ஏற்படக்கூடிய ஒன்று என்று கூறி புறக்கணித்து விட முடியாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கோடைக்காலத்தில் கூட தீங்கு விளைவிக்கும் புகைப்பனி காணப்படுகிறது. இது, தவறான சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான ஓர் அறிகுறியாக உள்ளது. வேளாண் கழிவுகளை எரிப்பதில் தொடங்கி, கட்டுப்பாடற்ற வாகன புகை வெளியேற்றம், பழைய காலத்து தொழிற்சாலை நடைமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய திறனற்ற ஒட்டுமொத்த பார்வை வரை இந்த காற்று மாசுபாட்டுக்கான காரணிகளாக உள்ளன.

45 லட்சம் மோட்டார் சைக்கிள்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் புகை வெளியேற்ற கட்டுப்பாடின்றி செயல்படும் எண்ணற்ற தொழிற்சாலைகள் மற்றும் செங்கல் சூளைகள் ஆகியவையும் இந்த காற்று மாசுபாட்டுக்கான முக்கிய காரணிகளாக உள்ளன.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் முக கவசங்களை அணியும்படியும், வெளியே செல்லும் நடவடிக்கைகளை குறைத்து கொள்ளும்படியும் மூத்த மந்திரியான மரியும் அவுரங்கசீப், அவசரநிலை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

Read Entire Article