துபாய்,
9-வது பெண்கள் உலகக் கோப்பை தொடர் அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று தொடங்குகிறது. வருகிற 20-ந்தேதி வரை நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், 'புதுமுகம்' ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகி வரும் இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா அளித்த ஒரு பேட்டியில் 'உலகக் கோப்பையில் அனைத்து ஆட்டங்களும் முக்கியமானது. இதனால் ஒவ்வொரு ஆட்டத்திலும் எங்களது 100 சதவீத திறமையை வெளிப்படுத்த வேண்டும். நியூசிலாந்து, இலங்கை வலுவான அணிகளாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடும் போது எந்தவித தவறும் இழைக்க கூடாது. அவர்களை எதிர்கொள்வது எப்போதும் உற்சாகமாக இருக்கும். ஏனெனில் அந்த சிறந்த அணியை தோற்கடிப்பது மிகவும் சவாலானது.
இந்தியா- பாகிஸ்தான் (6-ந்தேதி) போட்டி என்பது எல்லாவற்றையும் விட ரசிகர்களின் உணர்வுகளை பற்றியது என்று நினைக்கிறேன். இரு நாடுகளின் உணர்வுகள் தான் அதை மிகவும் தீவிரமாக்குகின்றன. எங்களை பொறுத்தவரை ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ஒரே மாதிரியான முயற்சியையே மேற்கொள்கிறோம். இந்த ஆட்டம் உள்ளூர் நேரப்படி பிற்பகலில் நடப்பதால் வெப்பநிலை சவாலாக இருக்கும். ஆனால் இந்தியாவுக்காக விளையாடும்போது, எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது. எத்தகைய சூழலுக்கும் தயாராக இருக்க வேண்டும்' என்று அவர் கூறினார்.