இந்திய கிரிக்கெட்டில் ஜாம்பவான்களான கவாஸ்கர், கபில்தேவ், டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், சேவாக், அணில்குப்ளே, டோனி ஆகியோர் உலகக்கோப்பை உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் வென்று சாதனை படைத்து ஓய்வு பெற்றனர். சமீபத்தில் அந்த வரிசையில் அடுத்தடுத்து இரண்டு ஜாம்பவான்கள் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் ேராஹித் சர்மா, விராட் கோஹ்லி ஆகியோர் கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பிறகு ஓய்வு அறிவித்தனர்.
தொடர்ந்து டெஸ்ட் போட்டியிலும் கடந்த 7ம் தேதி ரோஹித்தும் நேற்று கோஹ்லியும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். டெண்டுல்கருக்கு பிறகு கோஹ்லி உலக அளவில் அதிக ரசிகர்கள் கொண்டவர். ஆரம்பத்தில் 2008ல் U19 உலகக் கோப்பை வென்ற அணியின் கேப்டனாகவும், 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் வென்ற அணிகளில் முக்கிய வீரராகவும் திகழ்ந்துள்ளார். இந்திய அணியின் சீனியர் வீரரான விராட் கோஹ்லி(36), இந்தியாவுக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
31 சதங்கள் மற்றும் 46.85 சராசரியுடன் 9230 ரன்களை அவர் சேர்த்துள்ளார். அதிகபட்ச ஸ்கோராக 254 ரன்களை குவித்துள்ளார். 302 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். உலகின் தலை சிறந்த வீரர்களில்(Fab Four-ல்) முதலிடத்தில் விராட் கோஹ்லி, கேன் வில்லியம்சன், ஸ்டீவன் ஸ்மித், ஜோ ரூட் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். டி20 போட்டிகளில் அதிகமுறை (7 முறை) தொடர் நாயகன் விருதுகளை வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். டி20 போட்டிகளில் அதிக முறை அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையும் கோஹ்லி படைத்துள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்தில் அடுத்தமாதம் நடக்கும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கு முன்பே ரோகித், ஓய்வு பெற்றதால் கேப்டன் பதவி, சீனியர் வீரரான கோஹ்லிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்தில் நடக்கும் அரசியல் சதுரங்கத்தில் கோஹ்லிக்கு கேப்டன் பதவி வழங்காதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேப்டனாக இந்திய அணியை அதிக போட்டிகளில் வழிநடத்திய பெருமை கோஹ்லியையே சேரும். 68 போட்டிகளில் கோஹ்லி முதலிடம் வகிக்க, 60 போட்டிகளுடன் தோனி இரண்டாவது இடம் வகிக்கிறார். 68 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி 48 போட்டிகளில் வென்றுள்ளார்.
இந்திய கேப்டனாக 20 சதங்களுடன் கோஹ்லிமுதலிடத்தில் உள்ளார். கவாஸ்கர் 11 சதங்களுடன் 2வது இடத்தில் இருக்கிறார். 71 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் முதல்முறையாக 2018-19ம் ஆண்டு சீசனில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை அவர்களது மண்ணிலேயே 2-1 என வென்ற முதல் இந்திய கேப்டன் கோஹ்லி ஆவார். இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளிலும் டெஸ்ட் தொடரை வென்ற ஒரே இந்திய கேப்டன் கோஹ்லி ஆவார்.
இந்நிலையில் கோஹ்லி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுகிறேன். விளையாட்டுக்காக, நான் மைதானத்தைப் பகிர்ந்து கொண்ட மக்களுக்காக, நன்றியுணர்வு நிறைந்த இதயத்துடன் நான் நடந்து செல்கிறேன். நான் எப்போதும் டெஸ்ட் வாழ்க்கையை ஒரு புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன் என உருக்கமாக கூறியுள்ளார். இவர், டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவது உலக ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து விளையாடுவார் என்பது சற்று ஆறுதலாக உள்ளது.
The post உலக ரசிகர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.