லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யுடிசி) போட்டிகள், கடந்த 2023 ஜூன் முதல் 2025 ஜூன் வரை இரு ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இதற்காக, ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, வங்கதேசம், நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 9 அணிகள் மோதி வருகின்றன. இந்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம்பெறவில்லை.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்துக்கு 27 தொடர்கள், 69 போட்டிகள் லீக் ஆட்டங்களாக நடத்தப்படுகின்றன. பங்கு பெறும் ஒவ்வொரு அணியும் 6 தொடர்களில் மோதும். இவற்றில் 3 உள் நாட்டிலும் 3 பிற நாடுகளிலும் நடக்கும். ஒவ்வொரு தொடரும் 2 முதல் 5 போட்டிகள் கொண்டதாக இருக்கும். தற்போதைய நிலவரப்படி, ரேங்க் பட்டியலில் தென் ஆப்ரிக்கா முதலிடம் வகிக்கிறது. ஆஸ்திரேலியா 2, இந்தியா 3, இலங்கை 4வது இடங்களில் உள்ளன. பட்டியலில் முதல் இரு இடங்களை பெறும் அணிகள், 2025 ஜூனில் லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் மோதும்.
பட்டியலின் மேலே பல அணிகள் இருந்தாலும், எந்த அணிக்கு முதல் இரு இடங்கள் கிடைக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாத நிலை உள்ளது. இறுதிப் போட்டியை தீர்மானிக்க இன்னும் 10 டெஸ்ட் போட்டிகளே உள்ளன. பட்டியலில் முதலில் உள்ள தென் ஆப்ரிக்காவின் வெற்றி சதவீதம் 63.33. அந்த அணிக்கு பாகிஸ்தானுடனான மேலும் 2 போட்டிகளே மீதம் உள்ளன. முதல் இரு இடங்களில் நீடிக்க, இந்த இரு போட்டிகளில் ஒன்றில் வென்றால் கூட தென் ஆப்ரிக்காவுக்கான வாய்ப்பு பிரகாசமாகி விடும்.
அந்த சூழ்நிலையில் தென் ஆப்ரிக்காவை முந்திச் செல்ல இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளால் மட்டுமே முடியும். பாகிஸ்தானுடன் இரு போட்டிகளிலும் தென் ஆப்ரிக்கா டிரா செய்ய நேர்ந்தால், ஆஸ்திரேலியாவை இந்தியா, 3-2 என்ற கணக்கில் வெல்ல வேண்டும். அதேசமயம், தென் ஆப்ரிக்காவை முந்த, இலங்கையுடன் மோதவுள்ள 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெல்ல வேண்டும். பாக். உடனான தொடரை 1-0 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா இழந்தால், அந்த அணி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்க, ஆஸ்திரேலியா மோதும் மீதமுள்ள 5 போட்டிகளில் 2க்கு மேல் வெல்லக் கூடாது.
அல்லது, ஆஸியுடனான மீதமுள்ள 3 போட்டிகளில் இந்தியா ஒரு வெற்றிக்கு மேல் பெறக் கூடாது. தவிர ஒரு டிரா செய்யக் கூடாது. இலங்கையை பொறுத்தவரை, டபிள்யுடிசி பட்டியலில் 45.45 சதவீத வெற்றியுடன் 4ம் இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு உள்நாட்டில் ஆஸியுடன் 2 போட்டிகள் மீதம் உள்ளன. இலங்கை அணி இரு போட்டிகளில் வென்றால் கூட, அதன் வெற்றி சதவீதம் 53.85 ஆகவே இருக்கும். எனவே, பிற அணிகளின் வெற்றி தோல்விகளை இலங்கை ஏக்கத்துடன் நோக்க வேண்டி இருக்கும்.
இலங்கையின் வெற்றி சதவீதத்தை தென் ஆப்ரிக்கா அல்லது இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்று முந்தக் கூடும். இந்தியாவுடனான தொடரில் இரு டிராக்களுடன், 2-1 என்ற கணக்கில் ஆஸி வெற்றி பெற்றாலோ, பாகிஸ்தானுடனான தொடரில் தென் ஆப்ரிக்கா இரு போட்டிகளிலும் தோற்றாலோ இலங்கை, பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்க வாய்ப்பு உருவாகும். பட்டியலில் 2ம் இடத்தில் உள்ள ஆஸியின் வெற்றி சதவீதம் 60.71.
அந்த அணிக்கு இந்தியாவுடன் மூன்று டெஸ்ட், இலங்கையுடன் 2 டெஸ்ட்கள் மீதமுள்ளன. பட்டியலில் முதல் இரு இடங்களில் ஒன்றை பிடிக்க, இந்தியாவுடனான தொடரில் 3ல் 2 வெற்றிகள் பெற வேண்டும். இலங்கையுடனான தொடரை இழந்தாலும், இந்தியாவுடன் பெறும் வெற்றியே ஆஸிக்கு போதும். இந்தியாவிடம் 2-3 என்ற கணக்கில் ஆஸி தோல்வியை தழுவினால், இலங்கையுடனான இரு டெஸ்ட்களிலும் ஆஸி வெல்ல வேண்டும்.
மாறாக, பாக். உடனான தொடரில் தென் ஆப்ரிக்கா, ஒன்றுக்கு அதிகமாக வெற்றி பெறாவிட்டாலும் ஆஸிக்கு வாய்ப்பு அதிகரிக்கும். பட்டியலில் 33.33 சதவீத வெற்றி பெற்றுள்ள பாக். முதல் இரு இடங்களில் ஒன்றை பெற வாய்ப்பு மிகவும் குறைவு. நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இறுதிக்கு செல்ல வாய்ப்பு இல்லை.
* 3லும் வென்றால் இந்தியா தேறலாம்
இந்தியாவை பொறுத்தவரை, பட்டியலில் 57.29 சதவீத வெற்றியுடன் 3ம் இடத்தில் உள்ளது. பட்டியலில் முதல் இரு இடங்களில் ஒன்றை பிடிக்க, ஆஸியுடன் இனி மோதவுள்ள 3 டெஸ்ட்களிலும் இந்தியா வெல்ல வேண்டும். அல்லது இரு போட்டிகளில் வெற்றி, ஒன்றில் டிரா பெற வேண்டும்.
தொடரில் இந்தியா 2-3 என்ற கணக்கில் தோல்வியை தழுவினால் அதன் வெற்றி சதவீதம், 53.51 ஆக குறைந்து, முதல் இரு இடங்களில் ஒன்றை ஆஸ்திரேலியா, இலங்கை, தென் ஆப்ரிக்கா பெற வழி வகுக்கும். அந்த சமயத்தில் பாகிஸ்தானுடனான இரு போட்டிகளிலும் தென் ஆப்ரிக்கா தோற்க வேண்டும். இலங்கையுடனான தொடரில் ஆஸ்திரேலியா குறைந்தபட்சம் ஒன்றில் டிரா செய்ய வேண்டும். அப்படி நிகழ்ந்தால் இந்தியா முதல் இரு இடங்களில் ஒன்றை பெறலாம்.
The post உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளதா? மல்லுக்கு நிற்கும் 4 நாடுகள் appeared first on Dinakaran.