2025ஆம் ஆண்டு உலக அழகிபட்டத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறார் ஓபல் சுசாத்தா சுவாங்.ஐதராபாத்தில் நடந்த 2025ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுசாத்தா சுவாங் உலக அழகிப் பட்டத்தை வென்றிருக்கிறார். எத்தியோப்பியாவை சேர்ந்த ஹசேட் டெரேஜே இரண்டாம் இடத்தை பிடித்தார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 2025ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி நடந்து வந்தது. 108 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்ட போட்டியில் இந்தியா சார்பில், ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்ற நந்தினி குப்தா பங்கேற்றார். 40 பேர் காலிறுதிக்கு முன்னேறினர்.இதில் முதல் 8 இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பை நந்தினி குப்தா தவறவிட்டார். அழகி போட்டியின் இறுதி போட்டி கடந்த மே 31 ஆம் தேதி ஹைடைக்ஸ் அரங்கில் நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட பல உலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இறுதிச் சுற்றில், தாய்லாந்தின் ஓபல் சுசாத்தா சுவாங் 2025ம் ஆண்டிற்கான உலக அழகியாக வெற்றி பெற்றார். இது தாய்லாந்து நாட்டின் முதல் வெற்றி.
2024ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற செக் குடியரசு அழகி கிறிஸ்டினா பிஸ்கோவா, 2025ஆம் ஆண்டுக்கான உலக அழகி ஓபல் சுசாத்தாவிற்கு மகுடத்தை சூட்டினார். சமீபத்தில் தாய்லாந்தில் நடந்த அழகி போட்டியிலும் சுசாத்தா வெற்றி பெற்று மகுடம் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. எத்தியோப்பியாவை சேர்ந்த ஹசேட் டெரேஜே அட்மாசு இரண்டாவது இடத்தையும், போலந்தை சேர்ந்த மாஜா கிளாஜ்டா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.புகேட் (Phuket) நகரில் 2003ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி பிறந்த ஓபால், தாய்லாந்தின் பிரபலமான தம்மாசட் ( Thammasat ) பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் தாய்லாந்து, ஆங்கிலம் மற்றும் சீனம் ஆகிய மூன்று மொழிகளில் திறமை பெற்றவர். ஓபாலின் பெற்றோர், தானெட் டொன்கம்னேர்ட் (Thanet Donkamnerd) மற்றும் சுபத்ரா சுவாங் (Supatra Chuangsri) பிசினஸ் செய்து
வருகின்றனர்.
உலகளாவிய அழகி போட்டிகள், ஃபேஷன் நிகழ்ச்சிகள் என ஆர்வம் காட்டும் ஓபல் 2022ஆம் ஆண்டு, நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்றார் ஓபல்.2024ஆம் ஆண்டு, மிஸ் யுனிவர்ஸ் தாய்லாந்து பட்டத்தை வென்று, 2024 ஆம் ஆண்டு நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்றார். இதோ தற்போது தாய்லாந்து நாட்டின் முதல் உலக அழகி கிரீடம் வென்ற பெண்ணாக ஓபல் அந்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். ஓபல் சமூகசேவையில் அதீதநாட்டம் கொண்டவர். “OpalForHer” என்னும் தொண்டு நிறுவனம் மூலம் பெண்களின் மார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு கொடுத்து வருகிறார். மேலும் இலவசமாகவே நோய் கண்டறியும் மருத்துவ முகாம்கள் நடத்திவருகிறார். பெண்களுக்கான கல்வி, ஆரோக்கியம், சுகாதாரம் குறித்த கருத்தரங்குகள், முகாம்கள், நடத்தி பலருக்கும் உதவி வருகிறார் ஓபல்.1951-ம் ஆண்டு உலக அழகி போட்டி தொடங்கியதில் இருந்து இந்தியா 3-வது முறையாக உலக அழகி போட்டி நடத்துகிறது. இதற்கு முன்பு பெங்களூரு (1996) மற்றும் மும்பை (2024) ஆகிய இடங்களில் நடைபெற்றது. நம் நாட்டுப் பெண்கள் 6 முறை உலக அழகி பட்டத்தை வென்றுள்ளனர்.
ரீட்டா ஃபரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹைடன் (1987), யுக்தமுகி (1999), பிரியங்கா சோப்ரா (2000), மற்றும் மனுஷி சில்லர் (2017) ஆகியோர் இதுவரை கிரீடத்தை வென்றுள்ளனர். இந்த முறை இந்திய அழகி நந்தினி குப்தா பட்டம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் இறுதிச் சுற்றில் நுழைய முடியாமல் நந்தினி குப்தா வெளியேறினார். வாழ்த்துக்கள் தாய்லாந்து!
– ஷாலினி நியூட்டன்
The post உலக அழகி 2025 appeared first on Dinakaran.