சென்னை: அதிமுக உறுப்பினர்களின் பேச்சு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவில்லை என்று கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக சபாநாயகருடன் கார,சார விவாதம் நடத்தினர்.
தமிழக சட்டப்பேரவையில் நேரம் இல்லா நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுந்து நின்று ஒரு பிரச்னை குறித்து பேச முற்பட்டார். தொடர்ந்து சபாநாயகர், பாமக ஜி.கே.மணி அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை தொடர்பாக 2 நாட்களுக்கு முன்பே கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தார். அவர் பேசி முடித்ததும், உங்களுக்கு அனுமதி அளிக்கிறேன் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி, பிரதான எதிர்க்கட்சியான எங்களுக்கு பேச வாய்ப்பு அளியுங்கள். அவர்களுக்கு பின்னர் வாய்ப்பு கொடுங்கள் என்றார்.
சபாநாயகர் அப்பாவு: இன்று காலை 9.20 மணிக்குத்தான் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளீர்கள், ஜி.கே.மணிக்கு பேச அனுமதி கொடுத்து விட்டு உங்களை பேச அனுமதிக்கிறேன்.
எடப்பாடி பழனிச்சாமி: பிரதான எதிர்க்கட்சிகளுக்கு பேச அனுமதி அளிப்பதுதான் மரபு. எங்களுக்கு பேச அனுமதி தாருங்கள்.
சபாநாயகர்: 9.20 மணிக்குத்தான் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளீர்கள். உங்களுக்கு எப்படி பேச வாய்ப்பு தர முடியும். ஒரு நோக்கத்தோடுதான் சட்டப்பேரவைக்கு வந்துள்ளீர்கள்.
எடப்பாடி பழனிச்சாமி: எங்களை வெளியேற்றும் வகையில்தான் நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
சபாநாயகர்: நான் அவ்வாறு செய்யவில்லை. 9.20 மணிக்குத்தான் நேரடி ஒளிபரப்பு தொடர்பாக பேச அனுமதி கேட்டுள்ளீர்கள்.
எடப்பாடி பழனிச்சாமி: நேரடி ஒளிபரப்பு செய்வதில் ஏன் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறீர்கள். சபாநாயகர் இப்படி செய்தால், நாங்கள் என்ன செய்வது. எங்கள் உறுப்பினர்கள் விஜயபாஸ்கர், அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியது நேரலையில் ஒளிபரப்பு செய்யவில்லை.
சபாநாயகர்: கேள்வி நேரம் முதலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. 110 விதியின் கீழ் முதல்வரின் அறிவிப்பு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து, அமைச்சர்களின் மானியக்கோரிக்கை மற்றும் பதிலுரை நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. விஜயபாஸ்கர், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவில்லை என்பது உண்மைக்கு புறம்பான செய்தியை சொல்கிறீர்கள்.
எடப்பாடி பழனிச்சாமி: இவர்கள் இருவரும் பேசியது நேரடியாக ஒளிப்பு செய்யப்படவில்லை. சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
சபாநாயகர்: நான் அவ்வாறு செய்யவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு தொடர்ந்து பேச அனுமதி வழங்கி வருகிறோம். பேச அனுமதிக்கவில்லை என்று கூறுவது, முற்றிலும் புறம்பானது என்றார்.
இதையடுத்து, அதிமுக உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், பேச அனுமதி மறுப்பதாக கூறி வெளிநடப்பு செய்தனர். அப்போது சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார். பதிலையும் வாங்கிக் கொண்டு வெளிநடப்பு செய்வது நியாயம் இல்லை. அவர்கள் அனைவரையும் லாபியில் கோஷம் எழுப்பாதபடி வெளியேற்றும்படி அவைக்காவலர்களுக்கு உத்தரவிடுகிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வருவது, சந்தோசம்தான். காவி சட்டை அணியாமல் அவைக்கு வந்தார்களே.
இதையடுத்து சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவைக்கு வெளியே, வளாகத்தில் சபாநாயகருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
The post உறுப்பினர்களின் பேச்சு நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லையா? அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு: பேரவையில் கார சார விவாதம் appeared first on Dinakaran.