கோவை: கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேற்கு பகுதியில் கடந்த 17ம் தேதியன்று ஒரு தாய் யானையும், அதன் குட்டியும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டு இருப்பது கோவை வனத்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து வனப்பணியாளர்கள் அந்த யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தாய் யானை உடல்நலக் குறைவு காரணமாக தரையில் படுத்து விட்டது. இதனால், குட்டி யானை செய்வதறியாது பரிதவித்து நின்றது. 4 நாட்கள் சிகிச்சை அளித்தும், நேற்று முன்தினம் தாய் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
யானையின் உயிரிழப்பிற்கு மாரடைப்பு ஏற்பட்டது காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, நேற்று உயிரிழந்த பெண் யானையின் உடலை உடற்கூராய்வு செய்யப்பட்டது. அப்போது அந்த யானையின் வயிற்றில் இறந்த நிலையில் 12 முதல் 15 மாதங்களான ஆண் யானையின் சிசு இருப்பது தெரியவந்தது. மேலும், பெருங்குடல் பகுதியில் சுமார் 5 கிலோ அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
The post உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் இருந்த குட்டியும் சாவு: பெருங்குடலில் 5 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் மீட்பு appeared first on Dinakaran.