உயர்வுக்கு படி!

3 months ago 14

சென்னை,

பிளஸ்-2 படிப்போடு மாணவர்கள் தங்கள் கல்வியை நிறுத்திவிடக்கூடாது என்ற வகையிலும், உயர்கல்வியை அவர்கள் தொடரவும் பல நல்ல திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. இதில், தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் பங்கு அளப்பரியது. தலைமைச்செயலாளர் என்.முருகானந்தம் இதில் தீவிர அக்கறை காட்டி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளில் பிளஸ்-2 படித்த மாணவர்களில் எத்தனை பேர் உயர்படிப்புக்கு சென்றிருக்கிறார்கள்?, எத்தனை பேர் தேர்வில் தோல்வியடைந்து மறுதேர்வு எழுதாமல் படிப்பை நிறுத்திவிட்டார்கள்? என்று ஒரு கணக்கெடுப்பை நடத்த கல்வித்துறைக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் அவர் உத்தரவிட்டார்.

2022-2023-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்வு எழுதிய 3 லட்சத்து 97 ஆயிரத்து 809 பேரில், ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 99 மாணவர்கள் உயர்படிப்பு எதிலும் சேரவில்லை. அதுபோல, 2023-2024-ம் கல்வியாண்டில் தேர்வு எழுதிய 3 லட்சத்து 31 ஆயிரத்து 540 பேரில், ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 510 பேர் மட்டுமே மேல்படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள். ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 30 பேர் அதற்கு மேல் எந்த படிப்பிலும் சேரவில்லை என்று தலைமை செயலாளர் முருகானந்தம் சமீபத்தில் நடந்த மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். இதுபோன்ற மாணவர்களை அப்படியே விட்டுவிட தமிழக அரசு தயாராக இல்லை. மேற்கொண்டு படிக்க வைக்கவோ, அல்லது திறன் மேம்பாட்டுக்கான பயிற்சியளிக்கவோ, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குனரோடு ஆலோசித்து ஒரு நல்ல திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முனைந்துள்ளது.

'நான் முதல்வன்' உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ், 'உயர்வுக்கு படி' என்ற பெயரிலான இந்த திட்டம் கடந்த 9-ந்தேதி தொடங்கி இந்த மாதம் 8-ந்தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள 94 கல்வி வட்டாரங்களில் நடந்தது. கடந்த 2 ஆண்டுகளில் பிளஸ்-2-க்கு மேல் படிப்பை கைவிட்ட 2 லட்சத்து 47 ஆயிரத்து 129 மாணவ-மாணவிகளை அடையாளம் கண்டு, அவர்கள் என்ன காரணத்துக்காக படிப்பை தொடரவில்லை? என்பதை கேட்டறிந்து, அவர்கள் உயர்படிப்பை தொடர ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். அந்த நோக்கத்தில் தமிழக அரசு வெற்றி பெற்றுள்ளது. அரசின் இந்த முயற்சியால் 91 ஆயிரம் மாணவ-மாணவிகள் உயர்கல்வி படிப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு பள்ளிக்கல்வித்துறை ஒரு ஆய்வை நடத்தியது. அதன்படி, பல மாணவர்களுக்கு உயர்படிப்பு குறித்து சரியான புரிதல் இல்லாமல் இருப்பது, திருமணத்திற்கு முன் ஏதாவது வேலைபார்த்து சம்பாதிக்கவேண்டும் என்ற குடும்பச்சூழ்நிலை, படிப்பில் விருப்பம் இல்லாமல் இருப்பது, பெற்றோரின் உடல்நலக்குறைவு, மேல்படிப்புக்கு அதிக தூரம் செல்லவேண்டிய நிலை, பணவசதி இல்லாமல் இருப்பது போன்ற பல காரணங்கள் கண்டறியப்பட்டது.

இப்போது நடந்திருக்கும் இந்த திட்ட நிகழ்ச்சியில் அரசு அளிக்கும் சலுகைகள் விளக்கப்பட்டன. வங்கிகள் மூலம் கல்விக்கடன் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டன. இவ்வாறு மாணவர்களின் பெரும்பகுதியினரை கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், ஐ.டி.ஐ.க்கள் போன்ற படிப்புகளில் சேர வைத்தது போல, அப்படி சேர முடியாதவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மூலமாக ஏதாவது திறன் பயிற்சி அளிக்கவும் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. மொத்தத்தில், 'உயர்வுக்கு படி' என்ற இந்த ஆலோசனை முகாம், மாணவர்களின் வாழ்வு உயர்வதற்கு வழிகாட்டியுள்ளது.

Read Entire Article