உயர்ந்த பதவிகளை குறிவைத்து மாணவர்கள் படித்து முன்னேற வேண்டும்: விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி பேச்சு

19 hours ago 1

கூடலூர், ஜன.30. கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவியருக்கு ஏற்படும் பாலியல் பிரச்னைகள் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தத. இதில் மாவட்ட எஸ்பி நிஷா கலந்து கொண்டு பேசினார். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) யோகேஸ்வரி தலைமையில் மாணவர்கள் நடத்திய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். உதவி தலைமை ஆசிரியர் எபிபர்னாட் வரவேற்று பேசினார்.
தொடர்ந்து மாணவர்களிடையே மாவட்ட எஸ்பி நிஷா பேசுகையில், ‘‘மாணவ, மாணவியர் தங்கள் பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். சமூகத்தில் நடைபெறும் பல்வேறு தேவையற்ற பிரசனைகளில் இருந்து விலகி நிற்க வேண்டும். போதைப்பழக்கம் உள்ளவர்கள் குறித்து தகவல் தெரியவந்தால் அது குறித்து பள்ளியில் தகவல் அளிக்க வேண்டும். மாணவ, மாணவியர் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்து அதில் இருந்து தீர்வு காண முன்வர வேண்டும்.

உங்களது பெற்றோர்கள், சகோதரர்கள் மற்றும் குடும்ப சூழல்களை உணர்ந்து கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தற்போது அரசு மற்றும் தனியார் துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன. இது குறித்த தகவல்களை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப வாழ்வில் உயர உயர்ந்த பதவிகளை குறி வைத்து படித்து முன்னேற வேண்டும்’’ என தெரிவித்தார். தொடர்ந்து மாணவர்கள் இடையே இறங்கி சகஜமாக உரையாடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். நிகழ்ச்சியில் கூடலூர் டிஎஸ்பி வசந்தகுமார் மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர் நாகநாதன் நன்றி கூறினார். நாட்டில் கல்வி அறிவு, தொழில்நுட்பம் என பல்வேறு விஷயங்களில் நாம் முன்னேறி சென்று கொண்டிருந்தாலும் பல விஷயங்களில் இன்னும் முன்னேற வில்லை என்பதை அடிக்கடி பல்வேறு நிகழ்வுகள் நமக்கு நினைவூட்டிக் கொண்டே உள்ளன. எவ்வளவுதான் விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும் இன்றளவும் இயற்கையை நம்மால் முழுமையாக கணிக்க முடியவில்லை. அந்த அளவிற்குதான் விஞ்ஞானம் உள்ளது.

இதேபோல, ஒவ்வொரு துறையிலும் ஏதோ ஒரு குளறுபடிகள் இருந்து கொண்டேதான் இருக்கிறது. மருத்துவத்துறையில் பல இமாலய சாதனைகளை படைத்த மருத்துவர்களால் கூட இன்றளவும் செயற்கையாக ஒரு துளி ரத்தத்தை தயார் செய்ய முடியவில்லை. இவ்வாறு உதாரணங்கள் பல உள்ளன. நம் சமூகம் ஆரம்ப கட்டத்தில் இருந்து தற்போது வரை பல மாற்றங்களை கண்டுள்ளது. இந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அந்த மாற்றங்களோடு நாம் பயணித்து வருகிறோம். கடந்த 50 வருடங்களுக்கு முன்பு இருந்த பல விஷயங்கள் தற்போது மாற்றப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமான விஷயம் பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள் பல தற்போது மாற்றியமைக்கப்பட்டு பெண்கள் அனைவருக்கும் கல்வி வழங்கப்பட்டு அனைத்து துறைகளிலும் அவர்கள் தற்போது சாதித்து வருகின்றனர். பெண்களின் பெருமைகள், சாதனைகள் ஒருபுறம் நேர்முகத்தில் இருந்தாலும் மற்றொரு பக்கத்தில் பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் உள்ளன.

அந்த வகையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு புள்ளி விவரம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் இளம் வயது கர்ப்பம் 20 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாக அந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் பாலியல் இனப்பெருக்கம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் இளம்வயதில் கர்ப்பம் அடைவது அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கருத்தரித்த தாய்மார்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அதே நேரம் இளம் வயதில் கர்ப்பமடைதல் அதிகரித்து காணப்பட்டுள்ளது. கடந்த 2019-20ல் 11 ஆயிரத்து 772 ஆக இருந்த இளம் வயது கர்ப்பம் 2023-24ம் ஆண்டில் 14,360 ஆக அதிகரித்துள்ளது என பொது சுகாதாரத்துறை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இளம் வயதில் கர்ப்பமாவது 20% அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டு கருத்தரித்த தாய்மார்களில் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 1.5% பேர் இளம் வயது கர்ப்பம் என கண்டறியப்பட்டுள்ளது. நாகை, தேனி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இளம் வயதில் பெண்கள் கர்ப்பம் அடைவது அதிகரித்துள்ளது. இதற்கு குழந்தைகள் படிக்கும் போது படிப்பை பாதியிலேயே நிறுத்துதல், பாலியல் குறித்த உரிய விழிப்புணர்வு இல்லாதது காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது/ பொதுவாக, பெண்கள் 19 வயதுக்குள் கர்ப்பமடையும்போது அதனை பதின்ம வயது கர்ப்பம் என அழைப்பார்கள். அதாவது 13 வயதில் இருந்து 19 வயதுக்குள் கர்ப்பம் அடையும்போது அதனை இவ்வாறு அழைப்பார்கள். உலக அளவில் 15 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட சுமார் 16 மில்லியன் சிறுமிகளும் 15 வயதுக்குட்பட்ட சுமார் 2 மில்லியன் சிறுமிகளும் ஒவ்வொரு ஆண்டும் கர்ப்பம் அடைவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் நான்கு பெண்களில் ஒருவர் 18 வயதுக்கு முன் திருமணம் செய்து கொண்டவராகவும் 15 முதல் 19 வயதுடைய பெண்களில் 7.8 சதவீதம் பேர் கர்ப்பமாக அல்லது தாய்மார்களாக இருக்கிறார்கள் என தேசிய குடும்ப நல ஆய்வு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இணையதளத்தில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 49 லட்சத்து 93 ஆயிரத்து 93 கர்ப்பிணிகள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் வயது வாரியாக பிரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 62870 பேர் பதின்ம வயதில் கர்ப்பம் அடைந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக சேலம் மற்றும் மதுரையில் 3000க்கும் மேற்பட்டவர்கள் இளம் வயதில் கர்ப்பம் அடைந்துள்ளனர். காஞ்சிபுரம், சிவகங்கை, விருதுநகர், நாகர்கோவில், சென்னை போன்ற மாவட்டத்தில் இந்த சதவீதம் குறைவாக உள்ளது. பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் பெரும்பாலான வீடுகளில் பெண்களுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைத்தால் நமது கடமை முடிந்து விடுகிறது என எண்ணுகிறார்கள். மேலும் படிக்கும் போதே சிறுமிகள் ஏதாவது காதல் போன்ற விவகாரத்தில் சிக்கினால் உடனடியாக அவர்களுக்கு திருமணத்தை செய்து வைத்து விடுகிறார்கள். மேலும் வசதி இல்லாத மற்றும் கல்வி அறிவு குறைவான வீடுகளில் பெண்களை அதிகம் படிக்க வைக்காமல் பத்தாம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு முடித்தவுடன் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வழக்கத்தையும் தொடர்ந்து கடைபிடித்து வருவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

மேலும், பெண்களும் நாங்கள் படிக்கின்றோம் என கூறினாலும் அவர்களது பேச்சுக்கு பெரும்பாலான வீடுகளில் முக்கியத்துவம் அளிப்பதில்லை எனவும் சுயமாக முடிவு எடுக்கும் உரிமையை பெண்களுக்கு இன்றளவும் கிராமப்புறங்களில் வழங்குவதில்லை என்பதும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கிராமப்புறங்களில் இப்படி இருக்க நகர்ப்புறங்களில் வறுமை கோட்டுக்கு கீழ் அல்லது பெற்றோர்களின் அரவணைப்பில்லாமல் வாழும் சிறுமிகள் தவறான சேர்கையால் சிறு வயதிலேயே காதல் வயப்பட்டு தங்களது காதலருடன் சென்று விடுகின்றனர். அதன்பிறகு கர்ப்பமான பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது தான் 18 வயதிற்கு கீழ் உள்ள பெண் பிரசவத்திற்கு வந்துள்ளார் என மருத்துவமனை நிர்வாகத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கின்றனர். காவல்துறையினர் விசாரிக்கும்போது சிறு வயதிலேயே திருமணம் ஆனதும் அவர்கள் கணவருடன் சேர்ந்து வசிப்பதும் தெரியவரும். ஆனால் சட்டப்படி அது தவறு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்கின்றனர்.

இதில் சிறுமிகளை திருமணம் செய்த கணவரை போலீசார் கைது செய்வது கிடையாது. அதன் பிறகு நீதிமன்றம் சென்று வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இதில் பல பெண்கள் கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு தனியாகவே சென்று குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். இதுபோன்ற பல விசித்திரமான சம்பவங்கள் தொடர்ந்து வட சென்னையில் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் 17 வயது பெண் காணாமல் போகிறாள். அவரை போலீசார் கண்டுபிடித்தபோது அவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளதும் கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு இரண்டாவதாக ஒருவரை காதலித்து அவருடன் சென்று தனிமையில் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து முன்னாள் கணவர் மற்றும் இந்நாள் காதலன் என இருவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுபோல பல வழக்குகள் தொடர்ந்து வடசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்து கொண்டே உள்ளன. இதற்கு பெற்றோர்களின் வளர்ப்பு ஒரு முக்கிய காரணம் என சமூக ஆர்வலர்கள் கடுமையாக எச்சரிக்கின்றனர்.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வளர்க்கும் போது உரிய முறையில் ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் செய்யும் ஒவ்வொரு தவறுகளையும் பிள்ளைகள் உற்று கவனித்து வருகிறார்கள். அவர்கள் தவறு செய்துகொண்டே குழந்தைகளை வளர்க்கும் போது அதே தவறை குழந்தைகளும் செய்ய நேர்கிறது. மேலும் போதிய அரவணைப்பு இல்லாமல் பெண் பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது யாரிடமாவது ஆறுதலாக பேச வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பலர் சிறுமிகளை காதலித்து தங்களது வலையில் வீழ்த்துகின்றனர். ஒரு சிலர் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தினாலும் பல பெண்கள் வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றனர். எனவே இதற்கு முக்கிய காரணம் பெற்றோர்களே என பல சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இதுகுறித்து வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான டாக்டர் காருண்யா தேவி கூறியதாவது: தற்போது சென்னை போன்ற பெரு நகரங்களில் பெற்றோர்களால் உரிய முறையில் வளர்க்கப்படாத பெண் பிள்ளைகள் அல்லது சற்று கல்வி அறிவு குறைவாக உள்ள பெண் பிள்ளைகள் 18 வயது பூர்த்தி அடைவதற்குள் காதல் பிடியில் சிக்கி வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

அதன் பிறகு போலீசார் மூலம் புகார் கொடுக்கப்பட்டு இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இவர்களை அழைத்துச் செல்லும் நபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தாலும் சிறுமியின் சம்மதத்துடன் தான் எல்லாம் நடந்துள்ளது என வாதிக்கப்படுகிறது. இதுபோன்ற வழக்குகளில் பெரிய அளவில் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர்கள் கைது செய்யப்படுவதில்லை. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் கைது இல்லை என்ற சூழ்நிலையில் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. இதனால் ஒரே பெண் இரண்டு போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட வழக்குகளையும் நாம் பார்த்து வருகிறோம். பெரும்பாலும் போக்சோ வழக்குகளில் பாதிக்கப்படும் பெண் குழந்தைகளின் வாழ்க்கையை எடுத்து பார்த்தால் ஏதோ ஒரு இடத்தில் அந்த பெண் பிள்ளைகளுக்கு ஒரு சிறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பெற்றோர்களிடம் இருந்து அவர்களுக்கு முறையான அன்பு, அரவணைப்பு கிடைப்பதில்லை. இதனை அவர்கள் வெளியே எதிர்பார்க்கும் போது முழு நேரமாக பெண்களுக்காக நேரத்தில் ஒதுக்கும் நபர்கள் இவர்களை தவறாக நடத்தி அவர்களது வலையில் வீழ்த்துகின்றனர். எனவே இளம் வயது கர்ப்பம், இளம் வயது திருமணம், போக்சோ வழக்குகள் இவை அனைத்திற்கும் இளம் பிள்ளைகளின் பெற்றோர்கள் முக்கிய காரணமாக விளங்குகின்றனர். போதிய புரிதல் இல்லாமல் பதினாறு, பதினேழு வயதில் குழந்தையை பெற்றுக் கொண்டு அதன் பிறகு அந்த குழந்தைக்கு 16 வயது வரும் போது அந்த பெண்ணுக்கு 32 வயதாகும் அதற்குள் தனது கணவரை அந்த பெண் பெரும்பாலும் பிரிந்து விடுகிறார். இவ்வாறு தான் தற்போது சமூகத்தில் பல பிரச்னைகள் நடைபெற்று வருகிறது. இதற்கு பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கவுன்சலிங் அவசியம்
போக்சோ வழக்குகளில் சிக்கும் சிறுவர்களை அரசாங்கம் 18 வயது வரை பத்திரமாக பாதுகாத்து அவர்களுக்கு கல்வி அல்லது தொழிற்கல்வியை கற்றுத் தர வேண்டும். தவறு செய்து விட்டு மீண்டும் அவர்கள் சமூகத்திற்கு செல்லும் போது அடுத்தடுத்த தவறுகளை செய்ய அவர்களது வயதும் அவர்களது சூழ்நிலையும் காரணமாய் அமைந்து விடுகிறது. எனவே அதிலிருந்து அவர்களை காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போக்சோ வழக்குகளில் பாதிக்கப்படும் சிறுமிகளுக்காக தனி காப்பகம் அமைக்க வேண்டும். அவர்களுக்கு கவுன்சலிங் தொடர்ச்சியாக வழங்கி படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு அளிப்பதன் மூலம் மீண்டும் அவர்கள் சமூகத்திற்கு சென்று தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.

The post உயர்ந்த பதவிகளை குறிவைத்து மாணவர்கள் படித்து முன்னேற வேண்டும்: விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article