உயர் விளைச்சல் தரும் வம்பன் 7 பாசிப்பயறு

3 months ago 15

சமையலுக்கு, ஸ்நாக்ஸ் தயாரிப்புக்கு என பல வகை பயன்பாட்டுக்கு பாசிப்பயறு உதவுகிறது. இன்றும் மளிகைக் கடைகளில் இன்றியமையாத பொருட்களின் வரிசையில் பாசிப்பயறு இடம்பிடித்திருக்கிறது. இத்தகைய பாசிப்பயறில் பல ரகங்கள் உள்ளன. இவற்றில் புதுக்கோட்டை மாவட்டம் வம்பனில் உள்ள தேசிய பயறு வகை ஆராய்ச்சி மையம் வெளியிட்ட வம்பன் 7 ரகம் நல்ல விளைச்சலைக் கொடுப்பதோடு, சில சிறப்பியல்புகளையும் கொண்டதாக விளங்குகிறது. இந்த சிறப்பு ரகம் குறித்து விளக்குகிறார் இம்மையத்தின் பயிர்ப் பெருக்கம் மற்றும் மரபியல் வல்லுனர் முனைவர் ப.ராமகிருஷ்ணன்.

ஆடிப்பட்டம், புரட்டாசிப் பட்டம் மற்றும் தைப்பட்ட சாகுபடிக்கு வம்பன் 7 பாசிப்பயறு ரகம் மிகவும் உகந்தது. சித்திரைப் பட்டத்தில் போதிய அளவு மழைப்பொழிவு இருக்காது. சாதகமான தட்பவெப்பநிலையும் இருக்காது. அதுபோன்ற காரணங்களால் பயறு வகைகளை சாகுபடி செய்ய முடிவதில்லை. இந்த ரகமும் அப்படித்தான். ஆனால் நீர்ப்பாசன வசதி உள்ள இடங்களில் இறவைப் பயிராக வம்பன் 7 பாசிப்பயறை சாகுபடி செய்யலாம். இது உயர் விளைச்சல் கொடுக்க வல்லது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடலாம்.

சிறப்பியல்புகள்:

*அதிக மகசூல் மற்றும் சீரான முதிர்ச்சி பெறும் தன்மை.
* அதிக எடை உடைய பெரிய விதைகள்.
*மஞ்சள் தேமல் மற்றும் சாம்பல் நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத்திறனும், இலைச்சுருள் நோய்க்கு முழு எதிர்ப்புத்திறனும் கொண்டது.
*காய்கள் முதிர்ச்சி அடைந்தவுடன் வெடிக்காத தன்மை கொண்டது.
* அதிக புரதச்சத்து கொண்டது.
*முளைக்கட்டிய பயறில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது.
*மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்க மிகவும் உகந்தது. அதாவது பருப்பு மற்றும் மிக்சர் போன்ற தின்பண்டங்களில் சுவைகளை அதிகரிக்க பயன்படுகிறது.

சாகுபடி நுட்பங்கள்

ஏக்கருக்கு 8 கிலோ விதை போதுமானது. ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் கார்பன்டாசிம் அல்லது திராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். பூஞ்சாண விதை நேர்த்தி செய்த 24 மணி நேரம் கழித்து உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் ஆறிய அரிசிக் கஞ்சியில் ஒரு பொட்டலம் (200 கிராம்) ரைசோபியம், ஒரு பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா மற்றும் 100 கிராம் சூடோமோனாஸ் ஆகியவற்றுடன் கலந்து நேர்த்தி செய்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்திற்குள் 30 X 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.களைகளைக் கட்டுப்படுத்துவதற்கு விதைத்த மூன்றாம் நாள் பெண்டிமெத்திலின் களைக்கொல்லி மருந்தை ஏக்கருக்கு 1.3 லிட்டர் அளவில் 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளித்த பின் நீர்பாய்ச்ச வேண்டும். பின்பு விதைத்த 20-25 நாட்களில் ஒரு கைக்களை எடுக்க வேண்டும். அல்லது விதைத்த 15ம் நாள் இமாஸ்திபயர் களைக்கொல்லியை ஏக்கருக்கு 200 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும். களைக்கொல்லி உபயோகப்படுத்தவில்லையெனில் விதைத்த 15 மற்றும் 30ம் நாட்களில் கைக்களை எடுக்க வேண்டும்.

உர நிர்வாகம்

நிலத்தை நன்கு உழுது பண்படுத்தி கடைசி உழவின்போது ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் இட வேண்டும். விதைக்கும் முன் ஒரு ஏக்கருக்கு 10 கிலோ தழைச்சத்து (22 கிலோ யூரியா), 20 கிலோ மணிச்சத்து (125 கிலோ சூப்பர் பாஸ்பேட்), 10 கிலோ சாம்பல் சத்து (17 கிலோ மியூரியேட் ஆப் பொட்டாஷ்) மற்றும் 10 கிலோ துத்தநாக சல்பேட் ஆகியவற்றை ஒரே சீராக அடி உரமாக இட வேண்டும். மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரமாக இடுவதனால் கந்தகச்சத்து தனியாக இட வேண்டிய அவசியமில்லை. ஆனால் டை-அம்மோனியம் பாஸ்பேட் (டி.ஏ.பி) உரம் இடும்பொழுது பயிருக்குத் தேவையான கந்தகச்சத்தை ஜிப்ஸம் (45 கிலோ) உரம் மூலம் அளிக்க வேண்டும். மேற்கூறிய உரங்களை ஒன்றாக இடுவதன் மூலம் பயிரின் விளைச்சல் அதிகப்படுகிறது. மண்புழு உரத்தினை ஏக்கருக்கு 340 கிலோ என்ற அளவில் இடுவதன் மூலம் பயிருக்குத் தேவையான தழைச்சத்தின் அளவை 50 சதவீதம் வரை குறைக்க இயலும்.

நீர் நிர்வாகம்

பயிருக்குத் தேவையான நீரை விதைத்தவுடன் ஒரு உயிர்த்தண்ணீரும், மூன்றாம் நாள் மற்றொரு உயிர் தண்ணீரும் அவசியம் பாய்ச்ச வேண்டும். பின்னர் காலநிலை மற்றும் மண்வாகுக்கு ஏற்ப 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். பூக்கும் பருவம் முதல் காய்கள் முற்றும் பருவம் வரை நிலத்தைக் காய விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
(அடுத்த வார இதழில் மேலும் சில தகவல்கள் இடம்பெறும்)

தொடர்புக்கு:
முனைவர் ப. இராமகிருஷ்ணன் – 63804 88348.

The post உயர் விளைச்சல் தரும் வம்பன் 7 பாசிப்பயறு appeared first on Dinakaran.

Read Entire Article