உயர் ரத்த அழுத்தம்…தப்பிப்பது எப்படி?

15 hours ago 3

நன்றி குங்குமம் டாக்டர்

நோய் நாடி நோய் முதல் நாடி

பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு

ஒரு நாள் கார் டிரைவ் பண்ணிட்டு இருக்கும்போது, ஒரு இடத்தில் பல வண்டிகள் போக முடியாமல் நின்றுகொண்டிருந்தன. எனக்கோ, இப்பதான் பாலம் கட்டுகிறோம், ரோடு போடுகிறோம் என்று எதும் சாலையைத் தோண்டி போட்டு விட்டார்கள் என்று நினைத்தேன். அதன்பின் தான், அந்த இடத்தில் ஒருவரையொருவர் திட்டுவதைக் கேட்டு என்னவென்று பார்த்தேன். இரண்டு வண்டிகள் அவசரமாக செல்லும் போது, ஒருவருக்கொருவர் மோதி, கீழே விழுந்துவிட்டனர்.

உடனே, அந்த இருவருக்குள் யார் முதலில் தன்னை இடித்தது என்ற ரீதியில் சண்டை நடக்க ஆரம்பித்துவிட்டது. அதில் கூட்டத்தில் ஒரு நபர் சொன்னது, இப்படி காலையிலே வெட்டி சண்டையைப் பார்க்கும்போது, நமக்குத்தான் பிபி ஏறுது என்றார். ஏனென்றால், அவர்கள் சண்டை போடுவதால், இங்கே பல வண்டிகள் நகர முடியாமல் நிற்கிறது.

இப்படியாக, நாம் நம் வீடுகளில் விவாதம் பண்ணும்போதோ, அலுவலங்களில் விவாதம் பண்ணும்போதோ, மேலே சொன்ன மாதிரி ரோடுகளில் யார் என்றே தெரியாத ஒருவருடன் விவாதம் பண்ணும் போதோ, நமக்கு உடனே முதல் வார்த்தையாக வருவது, உன்னால் தான் எனக்கு பிபி வரப்போகிறது என்று யோசிக்காமல் சட்டென்று கூறுவோம்.

இன்றைக்கு அப்படிப்பட்ட ஹைப்பர் டென்ஷன் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். பேசன்ட் என்னை பார்க்க வரும்போது, சிலரிடம் சட்டென்று ஹைப்பர் டென்ஷன் உங்களுக்கு இருக்கிறதா? என்று கேட்பேன். அவர்கள் உடனே, அதெல்லாம் ஒண்ணுமில்லை, பிபியும், சுகரும்தான் இருக்கிறது சார் என்பார்கள். ஹைப்பர் டென்ஷனும், பிபியும் ஒன்று என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

உலக மக்கள் தொகையில் ஐம்பதுக்கு ஐம்பது சதவீத மக்களுக்கு பிபி இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. இதில் பிபியால் பாதிக்கப்பட்ட ஐம்பது சதவீத மக்களில் குறைந்தது இருபதிலிருந்து இருபத்தைந்து சதவீத மக்கள் மட்டுமே பிபியை சிகிச்சையின் மூலம் கண்ட்ரோலில் வைத்திருக்கிறார்கள் என்கிறது ஆய்வுகள். மற்ற இருபத்தைந்து சதவீத மக்களுக்கு பிபி இருப்பது தெரிந்தும், அதை கண்ட்ரோலில் வைக்காமல் இருக்கிறார்கள் என்றும் கூறுகிறது ஆய்வுகள்.

பிபியைப் பற்றி ஏன் தெரிந்து கொள்ள வேண்டும், எதற்காக பிபியை கண்ட்ரோலில் வைத்திருக்க வேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம்.
உடலிலுள்ள அனைத்து செல்களும் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஆக்சிஜனும், நியூட்ரிஷியனும் தேவைப்படுகிறது. உடலிலுள்ள செல்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு அதற்கான சத்தாக ரத்த ஓட்டம் வழியாகத் தான் ஆக்சிஜனும், நியூட்ரிஷியனும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு பிரஷர் தேவைப்படுகிறது. அந்த பிரஷரை ஹார்ட் பம்ப் மூலம் அனைத்து பாகங்களுக்கும் செல்லும்படி ஹார்ட் பார்த்துக் கொள்கிறது. ரத்த ஓட்டம் குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரி ஆக்சிஜனும், நியூட்ரிஷியனும் சரியாக உடலின் செல்களுக்கு செல்ல முடியாது.

அதனால் தான், ரத்த ஓட்டத்தின் பிரஷர் சரியான அளவில் இருக்க வேண்டும். அதாவது, Systolic BP என்பது 100 இல் இருந்து 140 க்குள் இருக்க வேண்டும். Diastolic BP என்பது 60 இல் இருந்து
90 க்குள் இருக்க வேண்டும்.எந்தவொரு நோயாக இருந்தாலும், முதலில் மரபணு சார்ந்த விஷயங்களில் இருந்துதான் ஆரம்பிக்கும். பிரஷரும் அப்படியே. குடும்பத்தில் பிரஷரால் பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் இருக்கும் போது, மற்றவர்களுக்கும் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், இது மட்டுமே காரணமில்லை.

ஒரு சிலர் அதிகளவு உணவில் உப்பு எடுத்துக் கொண்டாலோ அல்லது அதிகளவு உப்பு சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டாலோ பிரஷர் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், உடலுக்கு உடற்பயிற்சி செய்யாமலோ அல்லது உடல் அதிக எடையுடன் ஒபிசிட்டி சார்ந்த பிரச்சனைகளுடன் இருந்தாலோ, அவர்களுக்கும் பிரஷர் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

ஒருவருக்கு பிபி இருக்கிறது என்றால், எப்படி தெரிந்து கொள்வது?

முதலில் ஒருவருக்கு பிபி ஆரம்பமாகிறது என்றால், தலைவலி தொடர்ச்சியாக இருப்பது, மயக்கம் வருவது, வாந்தி வருவது போன்ற அறிகுறிகள் இருக்கும். சிலருக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாமலும் இருப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது.சிலர் கேட்பார்கள், பிபி இருந்தால் என்ன? அதுபாட்டுக்கு வந்துட்டு போகப் போகுது என்பார்கள். அப்படியெல்லாம் பிபியை நாம் எளிதாக எடுக்க முடியாது.

ஒருவருக்கு பிபி இருப்பது தெரியாமல் இருக்கும்போதோ அல்லது பிபிக்கு சிகிச்சை எடுக்காமல் இருக்கும் போதோ, ரத்த ஓட்டத்தில் பிரச்சனை ஏற்படும் போது, முக்கியமான மூன்று பாதிப்புகள் உடலில் ஏற்படும். அதாவது, உதாரணத்திற்கு, தலையில் ஸ்ட்ரோக் வரலாம், அதனால் கை, கால் இயங்க முடியாமல் போகலாம், இருதயத்தில் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படலாம், கிட்னியில் சிறுநீரக செயலிழப்பு சார்ந்த நோய்கள் ஏற்படலாம். இவற்றை தவிர, மேலும் ரத்த நாளங்களில் பிரச்சனைகள் ஏற்படும்.

சிலர் இந்த அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என்றும், ஸ்ட்ரோக் வந்த பின்னாடி தான், பல வருசமாக பிபி சார்ந்து எந்தவித சிகிச்சையும் செய்யாமல் இருந்திருக்கிறார் என்றும் மருத்துவர்களிடம் கூறுவார்கள். ஆனால், பிபிக்கு சிகிச்சை எடுக்காமல் இருக்கும்போது, அவரது வாழ்நாள் இயக்கம் சிலருக்கு மிகவும் பாதிப்படைந்துவிடும். அதனால் தான், பிபி இருக்கிறது என்றால், அதற்கான சிகிச்சையை தொடர்ந்து மருத்துவரின் ஆலோசனையோடு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து மருத்துவத்துறையில் கூறப்படுகிறது.

பிபி வராமல் இருப்பதற்கு என்ன பண்ணலாம் என்பதையும் தெரிந்து கொள்வோம்.முதலில் உணவு சார்ந்த விஷயங்களில் ஒரு நாளைக்கு ஒரு மனிதன் 12 கிராம் அளவுள்ள உப்பை உணவுடன் எடுத்துக் கொள்கிறான் என்று ஆய்வுகள் கூறுகிறது. அதனால், முதலில் உப்பை கட்டுப்பாடுடன் சாப்பிட வேண்டும் என்கிறார்கள். அதாவது ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 6 கிராமுக்கும் குறைவாக அதாவது ஐந்து கிராம் அளவுள்ள உப்பை மட்டும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதாவது, ஒரு டீ ஸ்பூன் அளவுள்ள உப்பை மட்டும் ஒருவர் சாப்பிட வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் இருக்கிறார்கள் என்றால், அந்த நாள் முழுமைக்கும் மொத்தமாக ஐந்து டீ ஸ்பூன் அளவில் தான் சமையலில் செலவிட வேண்டும் என்பதே மருத்துவர்களின் ஆலோசனையாக இருக்கிறது. இந்த அளவின் படி, உப்பு எடுக்கும் போது, மாத்திரை சாப்பிடும் முன்னரே, 10 மில்லி அளவு பிரஷர் குறையும் என்று ஆய்வுகள் கூறுகிறது. அந்தளவிற்கு பிபி வருவதற்கு உப்பின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

அதன் பின், உடலின் எடை 160 செ.மீ. உயரத்துடன் இருப்பவர்கள் 60 கிலோ இருக்கலாம். 170 செ.மீ. உயரத்துடன் இருப்பவர்கள் 70 கிலோ இருக்கலாம். உயரத்திற்கு அதிகமான எடையுடன் இருப்பவர்கள், உதாரணத்திற்கு, 170 செ.மீ உயரத்தில் இருப்பவர்கள் 80 கிலோ இருந்தால், அவர்கள் குறைந்தது 10 கிலோ எடை குறைத்தாலே, 10 மில்லி அளவு பிரஷரும் குறைந்து விடும். அந்தளவிற்கு உடலின் எடையும் ரத்த ஓட்டத்தின் தடைக்கு பங்களிக்கிறது. அதனால், முடிந்தளவு உப்பையும், உடலின் எடையும் குறையும் போது, 20 மில்லி அளவு பிபி குறையும். மேலும், உடற்பயிற்சி ஒரு நாளைக்கு குறைந்தது அரைமணி நேரம் செய்ய வேண்டும். இதனால் பிபிக்கு மருந்து எடுப்பவர்களது பிபியின் அளவு ஓரளவு நிதானமாக இருக்கும், மேலும், மற்ற நபர்களுக்கு பிபி வராமல் தடுக்கவும் முடியும்.

இதோடு, புகை பிடிப்பவர்கள் கண்டிப்பாக புகை பிடிக்கக்கூடாது. மேலும் இன்றைக்கு ஆல்கஹால் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகளவு இருக்கிறது. அதனால், நிதானமாக ஆல்கஹாலை எடுக்கப் பழக வேண்டும். இவற்றை எல்லாம் கடைப்பிடிக்கும் போது, உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.இவற்றை எல்லாம் சரி செய்து, சரியாக தூங்கவில்லையென்றால் பிரஷரை சரி செய்ய முடியாது.

அதாவது ஸ்லீப் ஸ்டடியில், ஸ்லீப் அப்னியா என்பார்கள். அதாவது தூங்கிக்கொண்டிருக்கும் போது, ஒருசில நொடிகள் மட்டும் மூச்சு நின்று விட்டு, மறுபடியும் மூச்சு இயல்பாக இயங்க ஆரம்பிக்கும். இம்மாதிரியான பாதிப்பு ஏற்படும் போது பிரஷர் இருக்கும். ஸ்லீப் அப்னியா என்பது வேறு, குறட்டை என்பது வேறு. அதனால், குறட்டை விடுபவர்கள் இதோடு ஒப்பிட வேண்டாம். அதனால், தூக்கத்தையும் கணக்கில் கொண்டு, நாம் குறிப்பிட்ட நேரத்தை தூக்கத்திற்கு செலவிட வேண்டும்.

நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் சில வாழ்வியல் நடைமுறைகளை மாற்றிக் கொண்டாலே, பிரஷரை சரியாக்க முடியும். மேலும், பிரஷருக்கு மாத்திரை எடுப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையோடு மருந்துகளை குறைப்பதோ அல்லது நிறுத்துவதோ வாழ்வியல் நடைமுறை மாற்றங்களோடு செய்யலாம். பெரும்பாலும் பிபிக்கு மருந்து எடுத்து ஏற்படும் பக்கவிளைவுகளை விட, பிபிக்கு மாத்திரை எடுக்காமல் ஏற்படும் பக்கவிளைவுகள் தான் அதிகம். அதனால், பிபியை முறையாக வைக்க முயற்சி செய்யுங்கள். அதனை மீறி, பிபி இருந்தாலும், அதற்கான சிகிச்சையை முறையாக எடுத்துக் கொள்ளுங்கள்.

The post உயர் ரத்த அழுத்தம்…தப்பிப்பது எப்படி? appeared first on Dinakaran.

Read Entire Article