மதுரை: உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, மதுரையில் 50 ஆண்டுக்கு முந்தைய 60 அடி உயர திமுக கொடிக் கம்பத்தை, திமுக கட்சி நிர்வாகிகள் அகற்றி கட்சித் தலைமையின் உத்தரவை நிறைவேற்றினர். ஆனால், கொடிக்கம்பத்தை அகற்றும்போது, திமுக மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் கண்கலங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சமீபத்தில் உத்தரவிட்டது. அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகளிடையே கிராமங்கள் முதல் மாநகரங்கள் வரை, பொதுஇடங்களில் யார் கட்சி, யார் அமைப்பு கொடி உயரமானது என்ற கவுரவப் பிரச்சனையில் கொடிக்கம்பங்கள் நடுவதில் பல்வேறு சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டது.