உயர் நீதிமன்ற உத்தரவின்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 47 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்: எதிர்ப்பு தெரிவித்த 8 பேர் கைது

1 month ago 4

துரைப்பாக்கம்: உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 47 வீடுகள் அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 8 பேரை, போலீசார் கைது செய்தனர். சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், 195வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுக்குப்பம், விபிஜி அவென்யூ விரிவு, மகாலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் 47 குடும்பங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றன. இப்பகுதி, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் எனக்கூறி வீடுகளை காலி செய்யக்கோரி, அப்பகுதி மக்களுக்கு வனத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், 30 வருடங்களுக்கு மேலாக வசித்து வரும் நாங்கள், வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்தி வருகிறோம். மேலும், அரசு சார்பில் இப்பகுதிக்கு குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. அதனால், இங்கிருந்து வீடுகளை காலி செய்ய மாட்டோம், எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, வனத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் வீடுகளை அகற்ற உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவின்படி, நேற்று வருவாய்துறையினர், வனத்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்பு துறையினர், 50க்கும் மேற்பட்ட போலீசாருடன், பொக்லைன் இயந்திரங்களுடன், ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ள பகுதிக்கு வந்தனர். அப்போது, வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில், 30 வருடங்களாக நாங்கள் வசித்து வரும் வீடுகளை காலி செய்யமாட்டோம், என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போலீசார், அப்பகுதியை சேர்ந்த லட்சுமி (45), பத்மா (50), பன்னீர்செல்வம் (55), ராஜா (25), துரை (23), ராமலிங்கம் (70), செல்வம் (58), ராம் (45) ஆகிய 8 பேரை கைது செய்தனர். இதில் லட்சுமி என்ற பெண் மயங்கி விழுந்ததால், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்ட 7 பேரையும் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனையடுத்து நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 47 வீடுகள் அகற்றப்பட்டன. இச்சம்பவதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post உயர் நீதிமன்ற உத்தரவின்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 47 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்: எதிர்ப்பு தெரிவித்த 8 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article