உபேந்திராவின் 'யு.ஐ' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்

3 weeks ago 7

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குனருமான உபேந்திரா ஹீரோவாக இயக்கி நடித்துள்ள படம், 'யு.ஐ'. சயின்ஸ் பிக்சன் ஆக்சன் கதைக்களத்தில் உருவான இப்படம் கடந்த 20-ந் தேதி வெளியானது. இதில் ரேஷ்மா நானய்யா, சன்னி லியோன், சாது கோகிலா, ஜிஷு சென்குப்தா, முரளி சர்மா என பலர் நடித்துள்ளனர். கன்னடத்தில் உருவான இந்தப் படம், தமிழ், தெலுங்கிலும் வெளியானது. இப்படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 'யு.ஐ' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

'யுனிவர்சல் இண்ட்லிஜென்ஸ்' என்ற வார்த்தையின் சுருக்கம் தான் 'யு ஐ'. எல்லா நாட்டு மக்களும் ஒரே இடத்தில் இணைந்து வாழும் கற்பனை உலகத்தில் அனைவருக்கும் உதவுகிறார் சத்யாவாக வரும் உபேந்திரா. கல்கியாக வரும் இன்னொரு உபேந்திரா ஊழல் அரசியல்வாதியை பொறுப்பில் அமர வைத்து அதிகாரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துகொள்ள முயற்சிக்கிறார்.

இவர்களுக்குள் நடக்கும் மோதலில் மனித குலத்தின் விதி எப்படி எழுதப்படுகிறது. மக்கள் நலனுக்காக போராடும் சத்யாவுக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பது இப்படத்தின் மீதி கதை.

உபேந்திரா தனது கதாபாத்திரத்தில் அசத்தி உள்ளார். அவருடைய உடை, ஸ்டைல், சித்தாந்தம் போன்றவை இரு கதாபாத்திரங்களின் வெவ்வேறு பரிமாணத்தில் சிறப்பாக உள்ளது. ரவிசங்கர் காமெடி வில்லனாக தன் பங்கை நிறைவாக செய்துள்ளார். முரளி ஷர்மா அனுபவ நடிப்பால் கதாபாத்திரத்தை முழுமை அடையச் செய்கிறார். நாயகி ரேஷ்மா நானையாவின் பொங்கும் இளமை கேளிக்கைக்கு நன்றாகவே பயன் தருகிறது. 

அஜினீஷ் லோக்நாத்தின் நவீன தொழில்நுட்ப பாணியிலான பின்னணி இசை கதைக்கு வலு சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் வேணுகோபால் நிஜ உலகத்துக்கும், கற்பனை உலகத்துக்கும் வேறுபாடு காண்பித்து மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். கிராபிக்ஸ் காட்சிகள் வேறு உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது. புரிந்துகொள்ள முடியாத சில சிக்கலான காட்சிகள் பலகீனமாக இருந்தாலும் சினிமாவுக்கான இலக்கணத்தை உடைத்துப் பண்ணியதால் படத்தில் உள்ள குறைகள் காணாமல் போகிறது.

ஆதி மனிதர்களை கதையின் மையமாக கொண்டு வந்திருப்பது பிரமிப்பை தருகிறது. அரசியல்வாதிகள் மக்களை எப்படி முட்டாள்களாக மாற்றுகிறார்கள் என்பதையும் அதிலிருந்து மக்கள் எப்படி வெளிவர வேண்டும் என்பதையும் நகைச்சுவையாக சொல்லியுள்ளார் இயக்குனர் உபேந்திரா.

Read Entire Article