வாரணாசி: தமிழ்நாடு-காசி இடையேயான ஆன்மீக உறவை வலுப்படுத்தும் விதமாக உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கடந்த 2022ம் ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்டது. அந்நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், காசி தமிழ் சங்கமத்தின் 3வது பதிப்பு வாரணாசியில் நேற்று தொடங்கியது. உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஒன்றிய அமைச்சர்கள் எல்.முருகன், தர்மேந்திர பிரதான் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், ஒன்றிய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல்.முருகன் பேசுகையில், ‘‘அயோத்தியில் குழந்தை ராமர் பிராணப்பிரதிஷ்டை செய்த பின் நடைபெறும் முதலாவது சங்கமம் என்பதும் மகா கும்பமேளாவுடன் இணைந்தது என்பதும் இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் தனி முக்கியத்துவம் பெறுகிறது. இந்த சங்கமத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து ஆயிரம் பிரதிநிதிகளை அழைத்துவர அரசு திட்டமிட்டுள்ளது. பல்வேறு மத்தியப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 200 தமிழ் வம்சாவளி மாணவர்களும் இந்த நிகழ்வில் இணைய உள்ளனர்.
தமிழ் கலாச்சாரத்தின் மீது பிரதமர் மோடி, ஒப்புமை இல்லாத அர்ப்பணிப்பை கொண்டுள்ளார். சிங்கப்பூரில் திருவள்ளுவர், கலாச்சார மையத்தை அமைத்ததன் மூலம் தமிழர்களின் வரலாற்றுப் பாதுகாப்பிலும், கவுரவிப்பிலும் அவரது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். 2023ம் ஆண்டு வாரணாசியில் காசி தமிழ் சங்கமத்தைத் தொடங்கிய போது கன்னியாகுமரி – வாரணாசி தமிழ் சங்கம ரயில் போக்குவரத்தை பிரதமர் தொடங்கியதோடு திருக்குறள், மணிமேகலை மற்றும் பிற செவ்வியல் இலக்கியப் படைப்புகளின் பிரெய்லி மொழியாக்கத்தையும் வெளியிட்டார்.
பிரதமரின் இத்தகைய முன்முயற்சிகள் தமிழ்நாட்டுடன் அவருக்குள்ள ஆழ்ந்த பிணைப்பையும் இந்தியாவின் பரந்த உறுதிப்பாட்டையும் எடுத்துக்காட்டுகின்றன. பிரதமர் மோடி தலைமையின் கீழ் அனைத்து மொழி, அனைத்து பாரம்பரியம், அனைத்து சமூகம் ஆகியவற்றுக்கு உரிய அங்கீகாரம் அளிப்பதை உறுதி செய்து அனைவரையும் உள்ளடக்கிய கலாச்சாரப் பாதையில், இந்தியா தொடர்ந்து நடைபோடுகிறது. காசி – தமிழ்நாடு இடையேயான ஒற்றுமை பாரதத்தின் ஒற்றுமையாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இம்முறை காசி தமிழ் சங்கமம் வரும் 24ம் தேதி வரை நடக்க உள்ளது.
* பிரதமர் வாழ்த்து
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் விடுத்த செய்திக்குறிப்பில், ‘‘அகத்திய முனிவர், பாரம்பரிய மருத்துவ முறைக்கும், செம்மொழி தமிழ் இலக்கியத்திற்கும் அளித்த பங்களிப்புகள் இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமத்தில் கொண்டாடப்பட இருப்பதை அறிந்து புளகாங்கிதம் அடைகிறேன். தமிழ்நாட்டிலிருந்து காசிக்குப் பயணிக்கும் மக்கள், வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத சிறந்த நினைவுகளை தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டுமென விழைகிறேன்’’ என்றார்.
The post உபியின் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 3.0 தொடங்கியது: வரும் 24ம் தேதி வரை நடக்கிறது appeared first on Dinakaran.