கால புருஷனுக்கு இருபத் தொன்றாவதாக (21) வரக்கூடிய நட்சத்திரம் உத்திராடம் நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் காலபுருஷ ராசி மண்டலத்தில் ஒன்பதாம் (9ம்) மற்றும் பத்தாம் (10ம்) பாவகத்தை உடைய ஒரு உடைபட்ட நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சூரியன் ஆவார். வடமொழியில் உத்திராஷாடம் என்பது பெயராக உள்ளது.உத்திராடம் என்பது சூரியனின் உத்ராயணப் பயணத்தை தொடங்கும் நட்சத்திரத்தின் ஆரம்ப புள்ளியாக உள்ளது. சூரியன் நீசமாக துலாத்தில் வலிமை குன்றி பின் தனது வலிமைக்கான முதல் அடியை தை மாதத்தில் மகரத்தில் பொங்கல் மற்றும் மகர சங்கராந்தியில் விசேஷத்துடன் தொடங்குகிறார் என்பது இயற்கையின் அமைப்பாக உள்ளது.
உத்திராடம் நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் குளம், கூவல், மணிமுடி, ஆடை, ஊர்தி ஆகியனவாகும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் இருந்துதான் செடிகளும் மரங்களும் பூ பூப்பதற்கான பணிகளை தொடங்குகின்றன என்பது சூரியனின் உத்ராயணப் பயணத்தின் அதிசயமாகும்.. இந்த பயணத்தில்தான் சூரியன் தன் வலிமையை தொடங்குகிறது. ஆகவே, உத்திராடம் என்பது சூரியன் உத்திராடத்தில் பயணிக்கும் காலம் பயிர் செய்யும் காலம் என்று் அறுவடை காலம் என்றும் என்பதை இயற்கை வரையறை செய்திருக்கிறது.
உத்திராடம் நட்சத்திரம் வடமொழியில் உத்தராஷாட என்று அழைக்கப் படுகிறது. ஆஷாட என்ற சொல்லுக்கு தோற்கடிக்கப்படாதவர் என்றும் தோற் கடி்க்க முடியாதவர் என்றும் பொருள்படும். இவர்கள் தர்மத்தில் வழியினை
பின்பற்றுதல் என்பது முக்கியமாகும்.
‘‘உத்திராடத்தில் ஒரு பிள்ளையும் ஊர் ஒரத்தில் ஒரு கொல்லையும் உணவுக்கு பஞ்சமில்லை’’ என்பது பழமொழிக்கு பொருத்தமாக உள்ள நட்சத்திரம் உத்திராடம்.
உத்திராட நட்சத்திரத்தின் அடையாளச் சின்னங்களாக யானை தந்தம், மெத்தை விரிப்பு மற்றும் கட்டிலின் கால்கள் உள்ளன.
நவகிரகங்களில் உள்ள செவ்வாய் பகவான் பிறந்த நட்சத்திரம் உத்திராடம். அதே போல, மஹாபாரதப் புராணத்தில் வரும் சல்லியன் உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவன். இவன் பாண்டுவின் மனைவி மாதுரியின் சகோதரன் ஆவான். மத்ர தேசத்தில் அரசனாக இருந்தான்.
கர்ணன் சூரியன் அம்சமாகப் பிறந்தவன் ஆகவே, அவனுக்கு சாதகத் தாரையாக உள்ள சல்லியனை துரியோதனன் தேரோட்டியாக இருப்பதற்கு அழைத்து சம்மதிக்க வைத்தான். சல்லியன் இருந்தவரை கர்ணனை யாரும் ஒன்று செய்ய முடியவில்லை. சல்லியன் தேரில் இருந்து இறங்கி சென்றவுடன் எளிதாக கர்ணனை அர்ச்சுனன் வென்றான் என்பதே சூட்சும உண்மை.
விஸ்வதேவன் புராணம்
விஸ்வதேவர்கள் என்பது அனைத்து தேவர்களையும் உள்ளடக்கிய அனைவரையும் குறிப்பதாகும். வேத காலத்தில் பல தேவதைகளை குறிப்பதாக உள்ளது. இந்த விஸ்வ தேவர்கள் அனைவரும் ரிக் வேதத்திற்குள் வருகின்றனர். இவர்கள் அனைவரும் தர்மத்தின் கடவுள்களாக போற்றப்படுகின்றனர். எல்லா ேதவர்களையும் இணைந்த கூட்டு சக்தியையும் விஸ்வ தேவர்கள் எனச் சொல்லப்படுகிறது.
நட்சத்திர மண்டலங்களையும் ரிஷிகள் அலங்கரிக்கின்றனர். அத்தகைய ரிஷிகளாக காஷ்யபர், அத்ரி, பரத்வாஜா, விஸ்வாமித்ரா, கௌதமர், ஜமதக்னி, வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். அதில், உத்திராட நட்சத்திரத்திற்குரிய ரிஷியாக காஷ்யபர் உள்ளார். இவர் ரிக் வேதத்தினுள்ளே உள்ளார் என்பது ஆச்சர்யமான ஒன்றாகும்.
பொதுப்பலன்கள்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யாருக்கும் அஞ்சமாட்டார்கள். இவர்களை வெல்வது எதிரிகளுக்கு அதிக கஷ்டமான ஒன்றுதான். ஆகவே, இவர்களாகவே எதையும் புரிந்துகொண்டு விட்டுக் கொடுத்தால்தான் உண்டு என்பதை அறிந்து கொள்ளுதல் அவசியம். இவர்களுக்கு விவசாயம் செய்வது நற்பலன்களை அளிக்கும். வாழ்வில் நேர்மையை கடைபிடிக்கும் பொழுது வெற்றியை நோக்கி பயணிப்பர் என்பதே உண்மை. இவர்கள் வேலைக்குச் சென்றாலும் சுயமாக தொழில் செய்வதில் அதிக நாட்டம் கொள்வர். புகழ் வேண்டாம் என சொல்லிக் கொண்டு புகழின் மீதே அதிக பற்றுதல் வைத்திருப்பர் என்பது இவர்களின் குணமாகும்.
ஆரோக்கியம்
இவர்களுக்கு உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரும். உடல் உஷ்ணத்தில் கவனமாக இருப்பது அவசியம். கண் தொடர்பான பிரச்னைகள், சீறுநீரக கோளாறு, சர்க்கரை நோய் ஆகியவை ஏற்பட வாய்ப்புண்டு.
உத்திராடத்திற்குரிய வேதை நட்சத்திரம்…
வேதை என்பது தொந்தரவுகளையும் மனஸ்தாபங்களையும் ஏற்படுத்தக் கூடிய நட்சத்திரமாகும். பூரம் என்பது வேதை நட்சத்திரமாக உள்ளது. இந்த நட்சத்திர நாளில் புதிய காரியங்களை தொடங்குவது வேண்டாம்.
பரிகாரம்
இந்த நட்சத்திரமானது சூரியனின் அம்சமும் படைப்பு கடவுளான பிரம்மனின் அம்சமும் பெற்ற நட்சத்திரம். ஆகவே, இவர்கள் தங்களுடைய ஜென்ம நட்சத்திரத்தன்று சிவலிங்க வழிபாடு செய்வதும், பலா மரங்களை நடுவதும் சிறந்த நற்பலன்களை அளிக்கும்.
The post உத்திராடம் நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்… appeared first on Dinakaran.