கால புருஷனுக்கு பன்னிரண்டாவது (12) வரக்கூடிய நட்சத்திரம் உத்திரம் நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் இரண்டு பாகங்களைக் கொண்டது. முதல் பாதம் சிம்ம ராசியிலும் மற்ற மூன்று பாதங்கள் கன்னி ராசியிலும் உடைபட்டு உள்ள நட்சத்திரமாகும். உடைபட்ட நட்சத்திரங்கள் முதலில் சிம்ம ராசிக்கு தன்மைக்குண்டான பலன்களும் பின்பு, உடைபட்ட மீதி உள்ள நட்சத்திர பாதங்கள் கன்னி ராசிக்கு தொடர்பான பலன்களைக் கொடுக்கும். இந்த நட்சத்திரம் அதிக புத்திசாலித்தனம் கொண்ட நட்சத்திரம்.உத்திர என்றால் பிந்தைய என்று பொருள். உத்திர நட்சத்திரத்திற்கு சமஸ்கிருதத்தில் உத்திர பாற்குனி என்று சொல்வார்கள். பூரம் நட்சத்திரத்திற்கு பூர்வ பால்குனி என்று சொல்வார்கள். பூர்வ பால்குனிக்கு பிந்தைய நட்சத்திரம் உத்திரமாகும்.உத்திரம் நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் பாற்குனி, பங்குனி, கடைச்சனி. ஆகியனவாகும்.எந்த வீட்டில் உத்திர நட்சத்திரத்தில் குழந்தை பிறக்கிறதோ அந்த வீட்டில் உள்ளவர்கள் யாரேனும் வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.உத்திர நட்சத்திரத்தில் பிள்ளை இருந்தால் உறியில் சோறு என்பர். இதன் பொருள் இவர்களைப் போன்று பெற்றோருக்கு உறுதுணையாக இருப்பவர்கள் யாரும் சொல்ல முடியாது.
உத்திரம் – விருட்சம் : அலரி
உத்திரம் – யோனி : ஆண் எருது
உத்திரம் – பட்சி : காகம்
உத்திரம் – மலர் : கதம்பம்
உத்திரம் – சின்னம் : கட்டில் கால்கள், மெத்தை
உத்திரம் – அதிபதி : சூரியன்
உத்திரம் – அதி தேவதை: மகாலெட்சுமி
உத்திரம் – கணம் : மனுஷ கணம்
இந்த உத்திர நட்சத்திரத்தில் ஸ்ரீ மகாலட்சுமி தேவி, ஐயப்பன் (எ) தர்ம சாஸ்தா உதித்த நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சூரியனாக இருப்பதால், இதை ஜென்ம நட்சத்திரமாகக் கொண்டவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் ஹோமங்கள் செய்வது சிறப்பான நற்பலன்களைத் தரும்.
சுபிட்சம் தரும் உத்திரம்…
உலகத்தை காப்பதற்காக விஷ்ணு பகவான் அழகிய மோகினி அவதாரம் கொண்டு சிவபெருமானுடன் ஐக்கியமானார். இந்த தெய்வீக சங்கமத்தில் பம்பை நதிக்கரையில் உத்திர நட்சத்திரத்தில் தோன்றியவர்தான் ஐயப்பன் ஆவார்.இந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உத்திரமானது சூரியனுக்கு உட்பட்ட ராசியில் 1 பாதமும் விஷ்ணுக்கு அதிபதியான புதனுக்குரிய கன்னி ராசியில் 2,3,4 பாதங்களும் உள்ளன. அவரின் பிறப்பானது சிம்மத்தில் உள்ள உத்திரம் 1ம் பாதத்தால் உண்டானதால் பந்தள ராஜாவால் கண்டெடுக்கப்பட்டு அரண்மனையில் குழந்தை பிராயம் தொடங்கியது. கன்னி ராசியில் செவ்வாயின் நட்சத்திரமான சித்திரையும் உள்ளது. இந்த நான்காவது ராசியாக செவ்வாய் தொடர்புடைய விருச்சிகமும் ஒன்பதாவது ராசியாக மேஷமும் வருவதால் வேகத்திற்கும் சண்டைக்கும் உரிய வாகனமான புலி இவருக்கு வாகனமானது. தேவர்களும் ரிஷிகளும் புலியாக உறுமாறி புடைசூழ ஐயப்பன் புலிமீது அன்னையின் ேநாய் தீர்க்க அரண்மனைக்குள் புலி கூட்டத்துடன் பிரவேசித்தான். புலிப் பாலுக்காக புலி கூட்டத்தையே அழைத்து வந்த ஐயப்பன். சிம்மம் ராசி உத்திரம் 1ம் பாதம் இதற்கு நான்காம் பாவக ராசியாக விருச்சிகம் வருவதால் செவ்வாய் அதிபதியாகவும் இருப்பதால் வில்லாளி வீரனாக ஸ்ரீ ஐயப்பன் இருக்கின்றான். பார்கவ மஹரிஷியின் புத்திரியாக உத்திர நட்சத்திர நன்நாளில் பார்கவி என்ற நாமத்துடன் ஸ்ரீ மகாலட்சுமி அவதரித்தாள். எனவேதான், இந்த நட்சத்திரம் ஐஸ்வர்யத்தை அள்ளித் தரும்.
பொதுப் பலன்கள்
இந்த நட்சத்திரக்காரர்கள் சூரியனின் அம்சம்கொண்ட நட்சத்திரமாக இருப்பதால் தைரியம் கொண்டவர்கள் ஆதலால், சவால்கள் இவர்களுக்கு சாதாரண விஷயமாக தோன்றும். இவர்கள் மண வாழ்க்கையில் மனைவியை தேர்ந்தெடுக்கும் பொழுது தகுந்த பொருத்தத்தை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். சிலருக்கு வேலை நிமித்தமாகவோ அல்லது வெளியூர் / வெளிநாடு செல்லும் காரணத்தால் பெற்றோரை பிரியும் நிர்பந்தம் ஏற்படும். இவர்கள் முதலாளிகளைப் போல தோரணம் இருக்கும். வீட்டின் மேல் அன்பும் பாசமும் உடையவர்களாக இருப்பர்.
தொழில்
இந்த நட்சத்திரக்காரர்களுக்கு சுய தொழில் சிறப்பாக இருக்கும். இது அவர்களின் முயற்சி ஸ்தானத்தை பொருத்தே பெரிய அளவிலா அல்லது சிறிய அளவிலா எனச் சொல்ல முடியும். சூரியன் அதிபதியாக இருப்பதால் அதிகாரம் செய்து மற்றவர்களை வேலை வாங்குவதில் வல்லவர்கள்.
உத்திரத்திற்குரிய வேதை நட்சத்திரம்
வேதை என்பது தொந்தரவுகளையும் மனஸ்தாபங்களையும் ஏற்படுத்தக்கூடிய நட்சத்திரமாகும். உத்திரட்டாதி வேதை நட்சத்திரமாக உள்ளது. எனவே,உத்திரட்டாதி நட்சத்திரம் அன்று புது காரியங்கள் தொடங்குவதை தவிர்க்கவும்.
ஆரோக்கியம்
உடல் உஷ்ணம் இருக்கும். ஆகவே, சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெய் வைத்து ஸ்நானம் செய்வது சிறப்பு. சில நோய்கள் சங்கடங்கள் வந்தாலும் காரண காரியம் புரியாமல் இருக்கும். காரணம் உடல் உஷ்ணம்.
உத்திரத்திற்குரிய பரிகாரம்
இவர்களுக்கு சூரியனே அதிபதியாக இருப்பதால். ஞாயிற்றுக் கிழமைகளில் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.தினமும் சூரியனை வழிபடுங்கள் நீங்கள் உற்சாகத்துடன் இருப்பீர்கள். உங்கள் உடலில் உள்ள செல்கள் எல்லாம் புதுபிக்கப்படும். மேலும், முடிந்தால் சூரிய நமஸ்காரப் பயிற்சியை கற்றுக் கொள்ளுங்கள் உங்களின் ஆரோக்கியம் மற்றும் புத்துணர்வு மேம்படும்.
The post உத்திரம் ;நட்சத்திரங்கள் பலன்கள் பரிகாரங்கள்… appeared first on Dinakaran.