உத்திரமேரூர் அருகே சடலத்தை புதைக்க இடமின்றி தவிப்பு: வருவாய்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை

7 hours ago 3

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே சித்தமல்லி கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதே கிராமத்தை சேர்ந்த பெருமாள் (95) என்பவர் வயது மூப்பு காரணமாக நேற்று மாலை மரணமடைந்தார். இப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு, நீண்ட காலமாக ஊருக்கு வெளியே ஓரிடத்தை பயன்படுத்தி வந்தனர். இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளாக அந்நிலத்தை ஒரு தனிநபர் வாங்கி, அதில் உடல்களை அடக்கம் செய்வதற்கு நீதிமன்ற தடை வாங்கியுள்ளார். இதனால், அந்த இடத்தில் பெருமாளின் சடலத்தை அடக்கம் செய்யக்கூடாது என்று போலீசார் தெரிவித்தனர்.

இதனால் நேற்றிரவு பெருமாள் குடும்பத்தினர், கிராம மக்கள் மற்றும் போலீசாருக்கு இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வருவாய்துறை அதிகாரிகள் விரைந்து வந்து, கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும், அதே பகுதியில் நிரந்தரமாக இடுகாடு ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இன்று காலை வரை இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கிராம மக்களிடையே பதட்டம் நிலவி வருகிறது.

The post உத்திரமேரூர் அருகே சடலத்தை புதைக்க இடமின்றி தவிப்பு: வருவாய்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Read Entire Article