
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் லிசாடி கேட் காவல் நிலைய பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மொயின் என்பவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். மொயின் அங்குள்ள பகுதியில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக மொயினை காணாததால் கவலையடைந்த அவரது சகோதரர் சலீம், நேற்று தனது மனைவியுடன் மொயினின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவு வெளிப்பக்கமாக பூட்டியிருந்ததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மொயின், அவரது மனைவி அஸ்மா மற்றும் அவர்களது மூன்று மகள்களான அப்சா (8), அசிசா (4) மற்றும் அடிபா (1) ஆகியோரின் உடல்களை போலீசார் கண்டெடுத்தனர். மேலும் அவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு பூட்டப்பட்ட விதம், குற்றத்தில் ஈடுபட்ட நபர் குடும்பத்திற்கு தெரிந்த ஒருவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இறந்தவர்களில் ஒருவரின் கால்கள் படுக்கை விரிப்பால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும், தடயவியல் குழு மற்றும் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர் என்றார்.