உத்தரபிரதேசத்தில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்; ஆண்டுக்கு 100 பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி இலக்கு: இந்தியாவின் துல்லிய தாக்குதல் திறன் மேம்படும்

4 hours ago 2

லக்னோ: உத்தரபிரதேசத்தில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தொடங்கப்பட்டதால், ஆண்டுக்கு 100 பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் துல்லிய தாக்குதல் திறன் மேம்படும் என்கின்றனர். இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையம் நேற்று ெதாடங்கி வைக்கப்பட்டது.  ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். ரூ.300 கோடி மதிப்பிலான இந்த புதிய மையம், ஆண்டுக்கு 80 முதல் 100 பிரம்மோஸ் மீயொலி ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

மேலும் 100 முதல் 150 அடுத்த தலைமுறை ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கப்படும். இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ரஷ்யாவின் மஷினோஸ்ட்ரோயெனியா ஆகியவற்றின் கூட்டு முயற்சியான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ், இந்த மையத்தை உருவாக்கியுள்ளது. உத்தரப் பிரதேச மாநில பாதுகாப்பு தொழில் வழித்தடத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. இதில் டைட்டானியம் மற்றும் விண்வெளி பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்ப வளாகமும் அடங்கும். பிரம்மோஸ் ஏவுகணையானது மணிக்கு 3,430 கிமீ வேகத்தில் (மாக் 2.8) பயணிக்கும் உலகின் வேகமான மீயொலி ஏவுகணைகளில் ஒன்றாகும். நிலம், கடல், வான் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் திறன் கொண்டது.

இந்த மையத்தில் உற்பத்தி செய்யப்படும் பிரம்மோஸ்-என்ஜி, தற்போதைய 2,900 கிலோ எடையுள்ள ஏவுகணையை விட இலகுவான 1,290 கிலோ எடையுடன், 300 கிமீக்கு மேல் தாக்குதல் தூரம் கொண்டதாக இருக்கும். இதனால், சுகோய் போர் விமானங்கள் ஒரு ஏவுகணைக்கு பதிலாக மூன்று ஏவுகணைகளை சுமந்து செல்ல முடியும். இதுபோன்ற ஏவுகணைகள் பயன்பாட்டுக்கு வரும் போது, இந்தியாவின் துல்லிய தாக்குதல் திறனை மேலும் உயர்த்தும்.‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தானின் முக்கிய விமான தளங்களை அழித்ததாகக் கூறப்படும் பிரமோஸ் ஏவுகணை, இந்திய பாதுகாப்பு மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post உத்தரபிரதேசத்தில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்; ஆண்டுக்கு 100 பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி இலக்கு: இந்தியாவின் துல்லிய தாக்குதல் திறன் மேம்படும் appeared first on Dinakaran.

Read Entire Article