
லக்னோ,
உத்தரபிரதேசம் சன்சார்பூர் கிராமத்தைச் சேர்ந்த கமல்ஜீத் (52) விவசாயி. இவர் வெள்ளிக்கிழமை மாலை கிராம பால் பண்ணைக்கு பால் விநியோகம் செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தனது வீட்டின் அருகே வந்துகொண்டிருந்த போது அருகில் உள்ள வயலில் ஒரு சிறுத்தை ஒன்று பதுங்கி இருந்தது.
இதனையறியாத கமல்ஜீத் வழக்கம் போல் தனது வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த போது மறைந்திருந்த சிறுத்தை கமல்ஜீத் மீது பாய்ந்து தாக்கியது. இதனால் அவர் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனிடையே படுகாயமடைந்த கமல்ஜீத் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் தப்பி ஓடிய சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.