
டேராடூன்,
உத்தரகாண்டின் பாவ்ரி கார்வால் பகுதியை சேர்ந்த இளைஞர் பிரமோத் பின்ஜோலா. உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதில் தீவிர ஆர்வம் கொண்டவர். தினமும் அதிகாலையிலேயே எழுந்து வீட்டுக்கு வெளியே சென்று உடற்பயிற்சிகளை செய்து வந்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டை விட்டு அதிகாலையிலேயே கிளம்பி சென்ற பிரமோத் சாலையில் நின்றபடி உடற்பயிற்சி செய்துள்ளார். எனினும், உடல் சோர்வு ஏற்பட்டதும் பயிற்சியை நிறுத்தி விட்டு, ஓரத்தில் இருந்த அமரும் பலகையின் மீது அமர்ந்து கொண்டார்.
ஆனால், மீண்டும் பயிற்சி மேற்கொள்வதற்கு பதிலாக, சோர்வில் மயங்கி கீழே சரிந்து விட்டார். அதிகாலை நேரத்தில் அந்த பகுதியில் யாரும் இல்லை என கூறப்படுகிறது. நீண்ட நேரத்திற்கு பின்னரே சிலர் வந்துள்ளனர். அவர்கள் அந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அதில் பலனில்லை. அவர் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் கூறி விட்டனர். அவர் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரமோத் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது, சரிந்து விழும் காட்சிகள் கொண்ட வீடியோ வைரலாகியது. இளம் வயதில், உடற்பயிற்சி செய்வதில் தீவிர ஆர்வம் கொண்ட நபர், பயிற்சி மேற்கொண்டபோது மாரடைப்பால் உயிரிழந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலங்களில், இளம் வயதில் ஆண், பெண் என இரு பாலரும் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. திருமண நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும், நடனம் ஆடும்போதும் இதுபோன்ற அதிர்ச்சி ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.