
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் பெண்கள் விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள் சிலர் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் பெண்கள் விடுதியின் அறை ஒன்றில் பொறுத்தப்பட்டிருந்த ஏசி வெடித்து தீ மளமளவென எரியத்தொடங்கியது.
இதனால் ஏற்பட்ட கரும்புகையைக்கண்ட பெண்கள் அவசர அவசரமாக கட்டிடத்தில் இருந்து வெளியேறினர். இருப்பினும் இரண்டாவது மாடியில் இருந்த சிலர் தீயின் பாதிப்பால் வெளியேற முடியவில்லை.
இந்த நிலையில் கட்டிடத்திற்குள் சிக்கிய மாணவிகள் பால்கனியில் இருந்து ஏணி மூலம் இறங்கி தீ விபத்திலிருந்து தப்பித்தனர். இதனால் சிலர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து போராடி தீயை அணைத்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.