லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது தலித் பெண் ஒருவர், கடந்த வியாழக்கிழமை இரவு தனது வீட்டின் அருகே நடைபெற்ற மத நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். ஆனால் வெகு நேரமாகியும் அந்த பெண் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக சென்றுள்ளனர். ஆனால் போலீசார் புகாரை பெற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், காணாமல் போன இளம்பெண்ணின் உடல், ஊருக்கு வெளியே வாய்க்கால் பகுதி அருகே கண்டெடுக்கப்பட்டது.
அந்த பெண்ணின் உடலில் ஆடைகள் இல்லாமல் இருந்துள்ளது. மேலும் கண்கள் பிடுங்கப்பட்டு, கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்த பெண்ணின் உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பைசாபாத் தொகுதியின் எம்.பி. அவதேஷ் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது உணர்ச்சிவசப்பட்டு பேசிய அவர், "ராமபிரானும், சீதையும் எங்கே?" என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
தொடர்ந்து பேசிய அவதேஷ் பிரசாத், "நான் டெல்லிக்கு செல்வேன். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி முன்பு பேசுவேன். இதில் நீதி கிடைக்காவிட்டால் மக்களவையில் இருந்து ராஜினாமா செய்வேன். நமது மகள்களை காப்பாற்றுவதில் நாம் தோற்றுக்கொண்டிருக்கிறோம். வரலாறு நம்மை எவ்வாறு மதிப்பிடப் போகிறது? நமது மகளுக்கு எவ்வாறு இப்படி ஒரு கொடூரம் நடந்தது?" என்றார்.
அயோத்தியில் உள்ள மில்கீபூர் சட்டசபை தொகுதியில் வரும் 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. முன்னதாக அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த அவதேஷ் பிரசாத், மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆக தேர்வான பிறகு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அயோத்தியில் இளம்பெண் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம், மில்கீபூர் இடைத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.