விருதுநகர், ஜன.22: விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்க மாவட்ட துணைத்தலைவர் ஆரோக்கியராஜ் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆந்திராவை போல் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6 ஆயிரம், கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 ஆயிரம், படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கான விண்ணப்பித்து ஒன்றரை வருடங்களாக காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தில் இலகுவான வேலை, 4 மணி நேர வேலையுடன் முழு ஊதியம் ரூ.319 வழங்க வேண்டும்.
நூறு நாள் வேலை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக ஊதா நிற அட்டை வழங்கவும், வேலை செய்த நாட்களுக்கு நிலுவை இன்றி ஊதியம் வழங்கவும் கோரி கோஷம் எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட 100 பெண் மாற்றுத்திறனாளிகள் உட்பட 190 மாற்றுத்திறனாளிகளை சூலக்கரை போலீசார் கைது செய்தனர்.
The post உதவித்தொகையை உயர்த்த வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்: 190 மாற்றுத்திறனாளிகள் கைது appeared first on Dinakaran.