ஈரோடு, ஜன.11: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் (ஏஆர்ஓ) வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான மனிஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய நாளான நேற்று 3 சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தொடர்ந்து, விடுமுறை தினங்கள் தவிர்த்து வரும் 13, 17ம் தேதிகள் என 2 நாட்களில் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியும். விதிமுறைகளின்படி, அரசு கட்டிடங்கள், பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பரங்கள் அகற்றப்பட்டு விட்டன. தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக புகார்கள் வந்துள்ளன.
இதுவரை, 42 புகார்கள் பெறப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. போதிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட பணம் இதுவரை ரூ.2.80 லட்சம் கைப்பற்றப்பட்டு மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்னும் 2 நாள்கள் மட்டுமே இருப்பதால், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடமும் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post உதவித்தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் appeared first on Dinakaran.