உதவி கமிஷனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மனித உரிமை ஆணைய உத்தரவை நிறுத்தி வைத்தது உயர் நீதிமன்றம்

17 hours ago 3

சென்னை: வட சென்னையில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபரின் மனைவியை, போலீசாருடன் சென்று சந்தித்த அந்த பகுதி உதவி ஆணையர் இளங்கோவன், இனிகத்தியை எடுத்தால் என்கவுண்டர் செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்ததாக வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் பரவியது. இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமை ஆணையம், அப்போதைய உதவி ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கும், சென்னை போலீஸ் கமிஷனருக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, இளங்கோவன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, விளக்கமளிக்க எந்த வாய்ப்பும் தராமல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன் என்று இளங்கோவன் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த மனித உரிமைகள் ஆணைய வழக்கறிஞர், உரிய நடைமுறைகளை பின்பற்றி, விளக்கமளிக்க அவகாசம் வழங்கிய பிறகே இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிரதான வழக்கு நிலுவையில் உள்ளது என்றார். வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முழு அளவில் விசாரணை நடத்தப்படாத நிலையில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு மனுதாரருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, மனித உரிமை ஆணையத்தின் இறுதி உத்தரவு வரும் வரை அப்போதைய உதவி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர். மேலும், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை மனித உரிமை ஆணையம் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

The post உதவி கமிஷனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மனித உரிமை ஆணைய உத்தரவை நிறுத்தி வைத்தது உயர் நீதிமன்றம் appeared first on Dinakaran.

Read Entire Article