மயிலாடுதுறை: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட்டது தவறில்லை என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார். மயிலாடுதுறை அருகே சின்னநாகங்குடியில் இன்று (நவ.8) நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்க வந்த, மதுரை ஆதீனம் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆதீனத்துக்கு தம்பிரான்கள் உள்ளனர். தம்பிரான்கள் ஆதீனத்துக்கு கட்டுப்பட்டவர்கள். நான் தருமபுரம் ஆதீனத்தில் தம்பிரானாக இருந்தேன். நான் தருமபுரம் ஆதீனத்துக்கு கட்டுப்பட்டவன். அந்த கட்டுப்பாட்டை மீறாமல்தான் நடந்தேன். ஆதீனங்களுக்கான விதிமுறைகளை வகுப்பது ஆதினகர்த்தர்கள்தான்” என்றார்.
அந்த விதிமுறைகளை மீறி நடப்பவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது என்ற கேள்விக்கு அவர் சிரித்துக் கொண்டே, “எங்கேயோ சுற்றி எங்கேயோ போகிறீர்கள்” என்று சொல்லி பதிலளிக்காமல் தவிர்த்தார். தொடர்ந்து அவர் கூறும்போது, “ஒரு மடத்தைப் பற்றி இன்னொரு மடத்திலிருந்து கருத்துச் சொல்லக் கூடாது. அவர்கள் எந்த ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்களோ அவர்களே தீர்வு சொல்வார்கள்” என்றார்.