சென்னை,
சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் 'தூய்மை சேவை' எனும் இயக்கத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தூய்மை பாரதம் திட்டத்துக்கான உறுதிமொழியை ஊழியர்கள் உடன் இணைந்து எடுத்துக் கொண்டார். இதையடுத்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
நாட்டின் பிரதமராக 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பதவியேற்றது முதல், 'தூய்மை இந்தியா' தொடர்பாக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். அனைத்து வீடுகளிலும், பள்ளிகளிலும் 100 சதவீதம் கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது. பிரதமர் மோடி தமிழகத்தை தொழில் மையமாக கொண்டு வந்துள்ளார். தமிழகத்தில் உள்ள காமராஜர் துறைமுகம், சென்னை துறைமுகம், வ.உ.சி. துறைமுகம் ஆகியவை சர்வதேச அளவில் வளர்ச்சி அடைந்துள்ளன.
பிரதமர் மோடியை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கோரிக்கைகள் வைத்துள்ளார். இதுதொடர்பாக, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் அலுவலகம் ஒவ்வொரு துறைக்கும் வலியுறுத்துவார்கள்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்-அமைச்சராகவோ, துணை முதல்-அமைச்சராகவோ பதவியேற்றுக் கொண்டாலும் தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் வரப்போவது கிடையாது. மது இல்லாத மாநிலமாக மாற்றப்போவது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.