சென்னை: உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்றதையடுத்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
மேலும் வெளியான அறிக்கையில்; “சனாதனம் என்றால் நிரந்தரமாக மாறாதது நிலையானது என்று பொருள். மாறாமல் நிரந்தரமாய் உள்ள சாதி வர்ணாசிரம கட்டமைப்பை, மாற்றி எல்லோரையும் சமத்துவம் நிறைந்த மனிதர்களாக மாற்றுவதற்காக, கொள்கை உறுதியோடு பேசி பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
பெரியார் -அம்பேத்கர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞரின் – கொள்கை வெளிவந்த உதயநிதி ஸ்டாலின் அவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக நியமனம் செய்திருப்பது, தமிழக அரசியலில் இளைஞர்களின் அத்தியாயம் தொடங்கியதை குறிக்கிறது.
கோயிலில் உள்ள அதிகாரத்தை வைத்து தான் தமிழ் சமூகத்தில், சாதிய வர்ணாசிரம கட்டமைப்பு நிலை நிறுத்தப்பட்டது. ஈராயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் ஆலயங்களில், தங்களைத் தவிர யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று நிலையான சனாதன அதிகாரத்தை கொண்டுள்ளார்கள்.
குறிப்பிட்ட சில ஆயிரம் பேர். இறைவனின் ஆலயங்களில், சமத்துவத்தை நிலை நாட்டுவதே சமூகநீதி. அந்த வகையில் இன்று துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலின், இறைவன் விரும்பிய படி கோயிலில் சமத்துவத்தை நிலை நாட்ட, அனைத்து சாதி இந்துக்களையும் அர்ச்சகராக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பாக கோருகிறோம்.
அனைத்து திட்டங்களுக்கும், செயலாக்கம் தரத்தக்கவர் என்ற வகையில், அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் பெரிய கோயில்களில் நிறைவேற்றுவார் என்ற நம்புகிறோம். அவரின் பணி சிறக்க மனதார வாழ்த்துகிறோம் இறைவனை வேண்டுகிறோம் நன்றி” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்பு: அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம் வாழ்த்து appeared first on Dinakaran.