உதயசூரியன் கொடுக்கக்கூடிய புதிய விடியல் : திராவிட மாடல் அரசின் சாதனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

15 hours ago 3

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7.5.2025) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நடைபெற்ற, நான்காண்டு சாதனை விழாவில், ஆற்றிய உரை:-

“இன்றைக்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். காரணம் இங்கே பேசினார்கள் அல்லவா? அவர்களின் மகிழ்ச்சியான வார்த்தைகள் கேட்டபோது இதைவிட எனக்கு என்ன வேண்டும்!

திராவிட மாடல் அரசின் திட்டங்களால் இன்றைக்கு தமிழ்நாடே மகிழ்ச்சியாக இருக்கிறது! அதனால்தான், நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மகிழ்ச்சியாக மட்டுமல்ல, உற்சாகமாகவும் இருக்கிறேன். ஏனென்றால், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாடு நிமிர்ந்திருக்கிறது என்று தமிழ்நாட்டு மக்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்! நான் மனநிறைவோடு இருக்கிறேன். ஏனென்றால், தங்களுடைய குறைகள் காது கொடுத்து கேட்கப்படுகிறது – தீர்க்கப்படுகிறது என்று தமிழ்நாட்டு மக்கள் மனநிறைவாக இருக்கிறார்கள்!

நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், இதே மே 7-ஆம் நாள், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்று முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டேன். என் மீது நீங்களும், தமிழ்நாட்டு மக்களும் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கைக்கு நான் உண்மையாக இருக்கிறேன் என்பதை என்னால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும்!

இன்றைக்கு நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் எவையெல்லாம் இல்லை என்று பட்டியல் போடவேண்டும் என்றால் – எவையெல்லாம் இருக்கும் என்று சாதனை பட்டியல் போடுவோம். ஆனால், இப்போது நான் சொல்ல இருப்பது திராவிட மாடல் ஆட்சியில் எவையெல்லாம் இல்லை என்று பட்டியல் போடவேண்டும் என்றால், வறுமை இல்லை! பட்டினிச் சாவு இல்லை! பணவீக்கம் இல்லை! பெரிய சாதி மோதல்கள் இல்லை!

மதக் கலவரங்கள் இல்லை! வன்முறைகள் இல்லை! இப்படி, சமூகத்தை பின்னோக்கித் தள்ளும் தீயவை இல்லை, இல்லை, இல்லை என்ற சூழ்நிலையத்தான் இன்றைக்கு நாம் உருவாக்கியிருக்கிறோம்!

நம்முடைய திராவிட மாடல் அரசின் திட்டங்களால், பயனடைந்த பலருடைய குரல்களை இங்கே அனைவரும் கேட்டோம். இன்றைக்கு நேரில் கேட்டிருக்கலாம்; ஆனால், உங்களைப் போல பல பேருடைய குரல்களை, கடந்த நான்காண்டுகளாக நாள்தோறும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். என்னைப் பொறுத்தவரைக்கும், நான் ஒரு கையெழுத்திடுகிறேன் என்றால், அதில், பலருடைய வாழ்க்கைத்தரம் உயர வேண்டும்! ஏழைகளின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும்! ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்! சமத்துவத்தை நோக்கி இந்தச் சமூகம் முன்னேற வேண்டும்! சமூகநீதி நிலைநாட்டப்பட வேண்டும்! இதைத்தான் என்னுடைய வாழ்க்கையின் பயனாக நான் நினைக்கிறேன்.

இந்த ஆட்சி அமையும்போது, இதற்கு நாம் கொடுத்த பெயர் என்ன தெரியுமா? ‘விடியல் ஆட்சி!’ ஏனென்றால், பத்தாண்டு காலமாக படுபாதாளத்துக்கு தள்ளப்பட்டு, தன்மானம் இல்லாத கூட்டத்தால், தரையில் ஊர்ந்து கிடந்த தமிழ்நாட்டை தட்டியெழுப்பி, தமிழ்நாட்டுக்கும், தமிழருக்கும் விடியலைக் கொடுக்க வேண்டும் என்று உறுதியேற்று, அதற்கு விடியல் ஆட்சி என்று பெயரிட்டோம்! நான் மிகவும் Confident-ஆக ஏன், Challenge செய்தே சொல்வேன்… இன்றைக்கு தமிழ்நாட்டை பல மடங்கு முன்னேற்றியிருக்கிறோம்.

ஒவ்வொரு குடும்பத்திலும் விடியலை ஏற்படுத்தி, வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறோம்! இது உறுதி! இந்த நான்காண்டுகளில், ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறோம். அதில், சில முத்திரைத் திட்டங்களை எடுத்துச் சொல்ல வேண்டுமென்றால்,

இங்கே சொன்னார்கள் – கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தைப் பற்றி பேசினார்கள். இந்தத் திட்டத்தை தொடங்கியதில் இருந்து, ஒவ்வொரு பயனாளிக்கும் இதுவரைக்கும் 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது! இன்றைக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 14 இலட்சம் மகளிர்க்கு, ஆயிரம் ரூபாய் என்று இந்த உரிமைத்தொகை வருகின்றபோது, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், “எங்கள் அண்ணன் ஸ்டாலின் கொடுக்கின்ற சீர்” என்று என்னுடைய சகோதரிகள் சுயமரியாதையுடன் பேசுகிறார்கள்! பெருமைப்படுகிறோம்!

அதுபோல், ஆட்சிப் பொறுப்பேற்றதும் கோட்டைக்குச் சென்று, விடியல் பயணம் திட்டத்திற்கு கையெழுத்திட்டேன்! இப்போது கூட அந்த விடியல் பயணப் பேருந்தில் தான் பயணம் செய்து விட்டு இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன். அந்த பேருந்துகளில், தமிழ்நாடு முழுவதும் என்னுடைய சகோதரிகள் “ஸ்டாலின் பஸ்” என்று தான் சொல்கிறார்கள்! இந்த திட்டத்தில் இதுவரைக்கும், சுமார் 685 கோடி பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்!

அது மட்டுமல்ல, நாம் ஆட்சிப் பொறுப்பு வருவதற்கு முன்னால் இருந்ததைவிட, இப்போது மகளிர் மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் 86 விழுக்காடு அதிகரித்திருக்கிறது!

அடுத்து, இந்தியாவுக்கே முன்மாதிரியான திட்டமான ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’! இந்த திட்டத்தால் நாள்தோறும் 18 இலட்சம் குழந்தைகள் வயிறார சாப்பிடுகிறார்கள்! இந்தத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் இருந்ததைவிட, இப்போது குழந்தைகள் பள்ளிக்கு வருவது அதிகமாகியிருக்கிறது. குழந்தைகளின் கற்றல் திறன் அதிகரித்திருக்கிறது. ஊட்டச்சத்தும் அதிகரித்திருக்கிறது! இது குழந்தைகளுக்கான திட்டம்!

அடுத்து, இளைஞர்களுக்கான புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள்! இந்த திட்டங்களால் பயனடைந்தவர்கள் இங்கு பேசினார்கள். இந்தத் திட்டங்களைப் பொறுத்தவரைக்கும், இதுவரைக்கும் சுமார் ஒன்பது இலட்சம் மாணவிகளும், நான்கு இலட்சம் மாணவர்களும், சுமார் 13 இலட்சம் பேர் பயனடைந்திருக்கிறார்கள்! இதனால், கல்லூரிகளில் மாணவ – மாணவிகளுடைய சேர்க்கை விகிதம் அதிகரித்திருக்கிறது!

இப்படி, ஒவ்வொரு பிரிவினருக்கும் என்று மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் – திருநங்கையருக்கான திட்டங்கள் – அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திட்டங்கள் – விவசாயிகளுக்கு – நெசவாளர்களுக்கு – தொழிலாளர்களுக்கு – மீனவர்களுக்கு – ஆதி திராவிடர் – பழங்குடியினர் – பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட – சிறுபான்மையின மக்களுக்கான முன்னேற்றத் திட்டங்கள் என்று இப்படி எல்லோருக்கும் பார்த்து பார்த்து திட்டங்களைச் செய்கிறோம்! அந்தத் திட்டங்களை எல்லாம் எடுத்துச் சொன்னால், இந்த ஒரு நாள் போதாது!

நம்முடைய திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரைக்கும், அனைத்துத் துறை வளர்ச்சி – அனைத்து மக்கள் வளர்ச்சி – அனைத்து மாவட்ட வளர்ச்சி – அனைத்துச் சமூக வளர்ச்சி என்று எல்லார்க்கும் எல்லாம் என்ற வளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டு வருகிறோம்! அதனால்தான் சொல்கிறேன்… இது, உதயசூரியன் கொடுக்கக்கூடிய புதிய விடியல்!

இதுமட்டுமல்ல, ஒன்றிய அரசு வெளியிடுகின்ற அனைத்து புள்ளிவிவரங்களையும் பார்த்தீர்கள் என்றால், நம்முடைய தமிழ்நாடு தான் முன்னிலையில் முதலிடத்தில் இருக்கிறது! ஒன்றிய அரசின் விருதுகளை வாங்கி குவித்துக் கொண்டிருக்கிறோம்! இதெல்லாம் தனிப்பட்ட ஸ்டாலினுக்கான விருதுகளாக! பாராட்டுகளாக! நான் நினைக்கவில்லை! இது தமிழ்நாட்டிற்கு கிடைக்கக்கூடிய பாராட்டுக்கள்! உங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய பாராட்டுக்கள்!

ஆட்சிப் பொறுப்புக்கு வந்த சில மாதங்களிலேயே பல ஊடகங்கள் இந்தியாவின் நம்பர்-1 CM என்று என்னைச் சொன்னார்கள். அது எனக்கான பெருமை இல்லை; எனக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கான பெருமை! பாராட்டு! ஏனென்றால், உங்களுக்காக பணியாற்றுவது மட்டும்தான் என்னுடைய கடமை! அந்தக் கடமையை நான் சரியாக செய்து கொண்டிருக்கிறேன்! அதனால்தான், இப்போது தமிழ்நாடு, இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் இருக்கிறது!

9.69 விழுக்காடு! வரலாறு காணாத பொருளாதார வளர்ச்சி இது! என்னைப் பொறுத்தவரைக்கும், நம்முடைய திட்டங்கள் மூலமாக மக்களுக்குப் பணப்பயன் மட்டுமில்லை; சமூகப்பயனும் சென்றடைய வேண்டும்! அதுதான் எங்களுடைய நோக்கம்! Simple-ஆக சொல்ல வேண்டும் என்றால், இது வழக்கமான ஆட்சி அல்ல; அனைவருடைய வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துகின்ற ஆட்சி! இந்த ஆட்சி எந்நாளும் தொடர உங்கள் ஆதரவும், உங்களுடைய அன்பும், என்றும், எப்போதும் தேவை!

இந்த நான்கு ஆண்டு காலத்தில் எல்லாவற்றையும் செய்து விட்டதாக நான் சொல்லி முடிக்கவில்லை! இன்னும் செய்ய வேண்டிய கடமைகளும், திட்டங்களும் நிறைய இருக்கிறது!

இந்த ஆட்சிக் காலத்துக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதை கடந்து, உங்கள் ஆதரவுடன் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் வென்று, திராவிட மாடல் ஆட்சிதான் தொடரப் போகிறது. அதனால்தான், நாங்கள் சொல்கிறோம் – “நாடு போற்றும் நான்காண்டு; தொடரட்டும் இது பல்லாண்டு!” என்பதை முழக்கமாக வைத்திருக்கிறோம்!

ஆணையிடுங்கள்! தமிழ்நாட்டை அரியணையில் வைத்து பாதுகாத்திட, திராவிட முன்னேற்றக் கழகமும், இந்த ஸ்டாலினும் இருக்கிறேன்! உங்கள் ஆதரவில் நமது திராவிட மாடல் ஆட்சி தொடரும்! தொடரும்! என்று கூறி, விடைபெறுகிறேன்!”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post உதயசூரியன் கொடுக்கக்கூடிய புதிய விடியல் : திராவிட மாடல் அரசின் சாதனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Read Entire Article