உண்ட வீட்டுக்கே இரண்டகம்

1 month ago 10

குறிப்பிட்ட ஒரு கழுதையும் ஒரு நரியும் நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். இருவரும் சேர்ந்து ஒரு ஒப்பந்தம் செய்தனர். அதாவது வாழ்நாள் முழுவதும் இருவரும் ஒற்றுமையாக இருப்பதுடன், நம்மில் யாருக்கேனும் ஆபத்து வந்தால் இன்னொருவர் அவங்களை காப்பாற்ற முன்வர வேண்டும் என ஒப்பந்தம் போட்டனர். சில காலம் நன்றாகத்தான் இருந்தனர். ஒரு நாள் இருவரும் பேசிக்கொண்டே காட்டுப்பாதையில் நடந்து சென்றனர். அப்பொழுது எதிரே சற்று தூரத்தில் ஒரு சிங்கம் வருவதை இருவரும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். நரி தனக்கு ஆபத்து நெருங்கியிருப்பதை உணர்ந்து, தன்னை எப்படியாவது தற்காத்துக்கொள்ள வேண்டும் என தனது தந்திர யோதனையை கிளறிக்கொண்டிருந்தது.

தான் காப்பாற்றப்படுவதற்கு கழுதைையக் காட்டிக் கொடுத்தாவது தப்பித்துவிட நினைத்தது அந்த தந்திர நரி. இதனால் நரி கழுதையிடம்… ‘‘நண்பா, நான் போய் அந்த சிங்கத்திடம் பேசுகிறேன். நீ கவலைப்படாதே… நான் உன்னை எந்த நிலையிலும் காப்பாற்றுவேன்’’ என வாக்கு கொடுக்கவே, கழுதையும் நரி சொல்வதை அப்படியே நம்பியது.நரி, தனியாக சிங்கத்தை சந்திக்க சென்றது. ‘‘சிங்க ராஜாவே. வணக்கம். இன்று உமக்காக நான் ஒரு கழுதையை உணவாகக் கொண்டு வந்திருக்கிறேன். அதைச் சாப்பிட்டு என்னை விட்டுவிடுங்கள்’’ என்றது. சிங்கமும் சரி என தலையசைக்கவே, இங்கேயே இருங்கள் அக்கழுதையை அழைத்து வருகிறேன் என கழுதையை நோக்கி விரைந்தது. நரி கழுதையிடம் வந்தது. ‘‘நண்பா… உன்னைக் கொல்லாதிருக்கும்படி சிங்கத்திடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன். அதுவும் சரியென்றது. மேலும் நரி அருகிலிருந்த பள்ளத்தை காண்பித்து, நீ உடனே இந்த பள்ளத்தில் குதித்து ஒளிந்து கொள். சிங்கம் உன்னை ஒன்றும் செய்யாது என்றது. கழுதையும் நரி நண்பன் சொல்வது உண்மை என நம்பி பள்ளத்தில் குதித்தது.

பின்னர் நரி சிங்கத்திடம் சென்று ‘‘சிங்க ராஜாவே, அதோ அந்த பள்ளத்தில் கழுதையை உமக்கு இரையாக இறக்கி வைத்திருக்கிறேன். நீங்கள் வந்து புசிந்து மகிழுங்கள் என்றது அந்த தந்திர நரி.சிங்கம் சற்றே நகர்ந்து யோசிக்கிறது. பள்ளத்தில் இருக்கும் கழுதை அவ்வளவு விரைவாக மேலே வரமுடியாது. எனவே இந்த நரியை முதலில் அடித்து உண்போம். பிறகு நிதானமாக கழுதையை அடித்து உண்ணலாம் என்று நினைத்த சிங்கம் எதிர்பாராத நேரத்தில் நரியை முதலில் அடித்துக்கொன்று தின்றது. நண்பனை நம்பவைத்து துரோகம் செய்த நரி முதல் பலி ஆயிற்று.‘‘துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மொழி புரண்ட காலுக்கு சமானம்’’ (நீதி. 25:19) என்றும், ‘‘துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாயிருந்தது’’ (சங்.119:158) என்று ‘‘துரோகிகள் பூமியில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்’’ (நீதி 2:22) என்றும் இறைவேதம் கூறுகிறது. இயேசுவின் சீடன் யூதாஸ் 30 வெள்ளிக் காசுகளுக்காக தனது குருவுக்கே துரோகம் செய்தது மிக முக்கியமான பைபிள் நிகழ்வாகும். ‘‘உண்ட வீட்டுக்கே இரண்டகம்’’ என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. இதில் ஒளிந்திருக்கும் அர்த்தம் மிகவும் ஆழமானது.

ஒருவரின் சொந்த வீடு, குடும்பம் அல்லது நெருங்கிய சுற்றத்திலும் நம்பிக்கைக்கே துரோகம் நடக்கலாம் என்ற உண்மையை இந்த பழமொழி தெரிவிக்கிறது. உணவளிக்கும், பாதுகாப்பளிக்கும் இடத்தில் கூட துரோகம், ஈர்ப்பு, இரட்டை முகம் காணப்படலாம் என்பது இந்தக் கூற்றின் வருத்தமிக்க உண்மை. பைபிள் நம்பிக்கை துரோகம் செய்வதை கடுமையாக கண்டிக்கிறது. நம்பிக்கையுடன் வாழவும், உண்மையாய் நடக்கவும், விசுவாசத்தை காப்பதின் முக்கியத்துவத்தையும் பல இடங்களில் வலியுறுத்துகிறது. எனவே நம்முடைய வாழ்க்கையில் நம்பிக்கை பெறுவதை விட, அதை பாதுகாப்பது தான் மிகவும் முக்கியம்.
– அருள்முனைவர்: பெ.பெவிஸ்டன்.

The post உண்ட வீட்டுக்கே இரண்டகம் appeared first on Dinakaran.

Read Entire Article