
புதுடெல்லி,
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். கரோல் பாக் நகரில் உள்ள சித் அனுமன் கோவிலில் இன்று சாமி தரிசனமும் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில், அனைத்து டெல்லிவாசிகளுக்கும் நான் வேண்டுகோள் ஒன்றை வைக்கிறேன்.
ரொட்டி அல்லது எந்தவொரு உணவையோ சாலையில் தூக்கி எறியாதீர்கள். விலங்குகளுக்கு அன்புடன் உணவு வழங்குங்கள். ஆனால் பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய கலாசாரம் மீது மதிப்பு வைத்திடுங்கள். உங்கள் சாலைகளை பாதுகாப்பாக வைத்திருங்கள் என பதிவிட்டு உள்ளார்.
அவர் வெளியிட்ட அந்த பதிவின்படி, அவர் டெல்லியில் பயணிக்கும்போது, நபர் ஒருவர் காரில் இருந்து கொண்டு ரொட்டியை எடுத்து சாலையில் வீசினார். பசுவுக்கு உணவு கொடுக்கிறோம் என நினைத்து கொண்டு அப்படி செய்துள்ளார். இதனால் காரை நிறுத்தி, அந்நபரிடம் மீண்டும் இப்படி செய்யாதீர்கள் என வேண்டுகோளாக கேட்டு கொண்டேன் என ரேகா பகிர்ந்துள்ளார்.
தொடர்ந்து அவர், ரொட்டி நமக்கான உணவு மட்டுமின்றி, நம்முடைய கலாசாரம், நம்பிக்கை மற்றும் மதிப்பு ஆகியவற்றுக்கான ஓர் அடையாளமும் ஆகும். அதனை தூக்கி வீசி அவமதிப்பது என்பது ஏற்று கொள்ள முடியாதது என வலியுறுத்தினார்.