உணவு டெலிவரி ஊழியரின் தன்னலமற்ற சேவை!

3 hours ago 1

நன்றி குங்குமம் தோழி

பிறரின் பசியை தான் உணர்ந்ததால்தான் ‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று தன் அறச்சீற்றத்தை வெளிப்படுத்தினார் பாரதி. உணவு சுதந்திரத்துடன் நாம் வாழ்கின்ற இதே சமூகத்தில்தான் ஒருவேளை உணவுக்கே அல்லாடுபவர்களும் வாழ்கின்றனர். அதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பகுதிகளில் வாழும் குழந்தைகள் தன் பசியை போக்கிக்கொள்ள பிறரிடம் கெஞ்சும் நிலையில்தான் இன்றும் உள்ளனர். உணவுக்காக தன்னிடம் கெஞ்சிய ஒரு சிறுவனின் பசியை போக்க தொடங்கி, இன்று பல குழந்தைகளின் பசியை போக்குவது மட்டுமின்றி அவர்கள் அதுவரை ருசித்திராத விதவிதமான உணவுகளை வழங்கியும் மகிழ்விக்கிறார் கொல்கத்தாவை சேர்ந்த உணவு டெலிவரி ஊழியர் பதிக்ரித் சாஹா.

கொல்கத்தாவில் வசித்து வரும் பதிக்ரித் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்யும் நிறுவனத்தில் உணவு டெலிவரி ஊழியராக வேலை செய்து வருகிறார். உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களை பொறுத்தவரையில் ஆர்டர் செய்யப்பட்ட உணவு டெலிவரிக்கு எடுத்து செல்லும் வழியில் வாடிக்கையாளரால் ஆர்டர் ரத்து செய்யப்பட்டால், அந்த உணவினை டெலிவரி ஊழியரே வீட்டிற்குக் கொண்டு செல்லலாம். அவ்வாறு ரத்து செய்யப்படும் உணவுகளை பதிக்ரித் சாஹா தான் எடுத்து செல்லாமல் கொல்கத்தா ரயில் நிலையத்தின் அருகே வசிக்கும் உணவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு கொடுப்பதோடு அவர்களின் கல்விக்கும் உதவி வருகிறார்.

“உணவு டெலிவரி ஊழியராக வேலை செய்வதால் பல்வேறு பகுதிகளுக்கு செல்வது வழக்கம். அப்போதெல்லாம் தெருவில் அலைந்து கொண்டிருக்கும் நிறைய குழந்தைகளை பார்த்திருக்கிறேன். குறிப்பாக ரயில் நிலையத்தின் அருகே உணவுக்கே வழி இல்லாத இவர்களால் முறையான கல்வியை எப்படி படிக்க முடியும். அவர்களை பார்க்கும் போது எனக்கு ரொம்பவே வருத்தமாக இருக்கும்.

ஒருநாள் நான் அந்தப் பகுதியினை கடந்து செல்லும் போது சிறுவன் ஒருவன் ஓடி வந்து என்னிடம் பணம் கேட்டான். அவன் கேட்டது யாசகம் செய்யும் தொனியில் இருந்தது. கையேந்தி நிற்கும் அவனிடம் நான் இரக்கப்படுவதா அல்லது இந்த சிறுவயதில் இப்படி பணம் கேட்டு நிற்கிறானே என அவனை விரட்டுவதா என்று தெரியவில்லை. அவனிடம் கோவப்படுவதும் நியாயமில்லை என்பது எனக்கு புரிந்தது. நான் எவ்வளவு முயற்சித்தும் அவன் என்னை விடுவதாக இல்லை.

பணம் கேட்டு ரொம்ப அடம்பிடித்தான். அவன் திரும்பி செல்லும் போது பணத்துடன் செல்லவில்லை யென்றால் அவன் அம்மா அவனை அடிப்பார் என்றும் பிறகு சாப்பிட உணவே தரமாட்டார் என்றான். எனக்கு சங்கடமாக இருந்தது. அப்போதுதான் அந்த ஏழை குழந்தைகளின் உண்மையான நிலையை என்னால் முழுவதுமாக உணர முடிந்தது. முடிந்தவரை அவர்களுக்கு உதவ வேண்டும் என நினைத்தேன்.

அதற்கு என் தொழில் நல்வாய்ப்பாக அமைந்து அவர்களின் பசியை அவ்வப்போது போக்க முடிந்தது. ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளை வாடிக்கையாளர்கள் ரத்து செய்யும் போது அந்த உணவுகளை எடுத்து வந்து இந்தக் குழந்தைகளிடம் கொடுப்பேன். அவர்களுக்கு அது மகிழ்வாக இருந்தாலும் என்னால் நிறைவாக உணர முடியவில்லை. எல்லா நேரமும் உணவுகள் ரத்து செய்யப்படுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் என்னால் முடிந்தவரை எல்லா நேரமும் இவர்களுக்கு உணவு கொடுக்க என்ன வழி என்று தேடினேன்.

பொதுவாக உணவு விடுதிகளில் எல்லா உணவுகளும் செலவாகாது. சில உணவுகள் மீந்துவிடும். அவ்வாறு மீறும் உணவுகளை இந்தக் குழந்தைகளுக்காக தர வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அவர்களும் சம்மதிக்கவே, தினமும் உணவு விடுதிகளில் தேவைக்குப் போக மீதமாகும் கைப்படாத ஆரோக்கியமான உணவுகளை இந்தக் குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தேன். அன்றாடம் வழக்கமான உணவையே ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்தக் குழந்தைகளுக்கு பிரியாணி, சைனீஸ் ஃபுட், ரோல்ஸ், ஃப்ரைடு ரைஸ், பீட்சா போன்ற விதவிதமான உணவுகள் பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.

உணவகத்தின் உதவியால் இவர்களுக்கு உணவினை கொடுக்க முடிகிறது’’ என்றவர், HELPP என்ற அறக்கட்டளை தொடங்கியது குறித்து விளக்குகிறார். “முதலில் குழந்தைகளின் வயிற்றுப்பசிக்கு உணவை கொடுத்ததும், அவர்களின் அறிவுப்பசிக்கு கல்வியை கொடுக்க நினைத்தேன். நாள் முழுவதும் உணவு தேடுவதிலேயே பொழுதை கழித்த அந்தக் குழந்தைகளை ஓரிடத்தில் அமர வைத்து மாலை நேரங்களில் என்னால் முடிந்த அடிப்படை பாடங்களை சொல்லிக் கொடுத்தேன். குழந்தைகளும் ஆர்வமாக கற்றுக்கொண்டனர். இந்த சேவையை மேலும் தொடரத்தான் இந்த அறக்கட்டளையை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தேன். இதன் மூலம் இந்தப் பகுதியில் வசிக்கும் குழந்தைகளை கல்வி மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவர நினைத்தேன்.

நான் பள்ளிக்கல்வி முடித்திருக்கிறேன். வறுமை காரணமாக என்னால் உயர் கல்வியை தொடர முடியவில்லை. இளம் வயதிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய குடும்பச் சூழல். இந்தக் குழந்தைகள் ஆர்வமாக கல்வி கற்பதை பார்த்ததும் அவர்களுக்கு முறையான கல்வி கிடைக்க வேண்டும், நன்றாக படித்து சமுதாயத்தில் ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.

இப்போது தன்னார்வலர்கள் சிலர் குழந்தைகளுக்கு பாடங்களை சொல்லிக் கொடுத்து வந்தார்கள். இப்போது அடுத்த கட்டமாக 19 குழந்தைகளை ஆரம்ப பள்ளிகளில் சேர்த்து படித்து வருகிறார்கள். மற்றவர்களுக்கு அறக்கட்டளை சார்பாக வகுப்புகள் தினமும் நடத்தப்படுகிறது. அடுத்து தனி கட்டிடம் கட்டி அதில் இந்தக் குழந்தைகளுக்கு மூன்று வேளையும் உணவளிக்க வேண்டும். இங்கு மட்டுமில்லாமல் கொல்கத்தாவில் உள்ள தாழ்த்தப்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் மூன்று வேளையும் உணவுகளை வழங்க வேண்டும் என்பதுதான் என் கனவு” என்றவர், குழந்தைகளின் வாழ்வு மேம்பட சில கோரிக்கைகளை முன்வைக்கிறார்.

‘‘அறக்கட்டளை பற்றி கேள்விப்பட்டு பலர் உதவி செய்ய முன் வருகிறார்கள். அறக்கட்டளை மூலம் பயிலும் குழந்தைகளுக்கு பாடங்கள் மட்டுமில்லாமல் கணினி, பாட்டு, நடனம், வரைதல், கராத்தே, சதுரங்கம் போன்றவற்றையும் கற்றுத் தருகிறோம். குழந்தைகள் மட்டுமில்லாமல் கணவனை இழந்த பெண்களுக்கும் அவர்கள் சுயமாக வாழ சிறு தொழில் அமைப்பது குறித்து பயிற்சி அளிக்கிறோம். அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் கட்டிடம் மிகவும் பழுந்தடைந்த நிலையில் உள்ளது. அதை சீர் செய்ய மக்கள் உதவ முன்வந்தால், அறக்கட்டளை வாயிலாக மேலும் பல ஆதரவற்றவர்களுக்கு உதவ முடியும்” என்று கூறும் பதிக்ரித் சாஹாவை குழந்தைகள் அனைவரும் ‘ரோல் காகு’(மாமா) என்று அன்புடன் அழைக்கின்றனர்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

The post உணவு டெலிவரி ஊழியரின் தன்னலமற்ற சேவை! appeared first on Dinakaran.

Read Entire Article