உணவகங்களில் ஆய்வுக்கு செல்லும்போது உயர் நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல்

16 hours ago 3

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: உணவுப் பாதுகாப்பு என்பது மிக மிக அத்தியாவசியமான ஒன்று. ஆனால், உணவுப் பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட்டபோதும், அமல்படுத்தப்பட்டபோதும், உணவகங்களையோ, உணவக உரிமையாளர்களையோ அவர்களின் அன்றாட நிலைபாடுகளையோ, கொள்முதல் செய்யப்படும் உணவுப்பொருட்களின் தரத்தை பற்றியோ சிறிதளவும் யோசிக்காமல், சட்டங்கள் இயற்றி அமலாக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உணவகங்களில் ஆய்வு செய்கின்றபோது, அதை ஊடகங்களுக்கோ, செய்தியாளர்களுக்கோ, பேட்டி அளிக்கக்கூடாது என மிக அழுத்தமான ஓர் உத்தரவை அளித்து, இதுபோன்று பேட்டியளிப்பது பல ஆண்டுகளாக செயல்பட்டு, தனக்கென ஒரு அந்தஸ்தை தேடி வைத்திருக்கும் உணவகங்களின் செயல்பாடுகள் கேள்விக்குறியாக்கப்பட்டு, உணவக வணிகமே சீரழிந்து போகும் நிலை ஏற்படுகின்றது என கண்டிப்புடன் உத்தரவிடப்பட்டது.

எனினும், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு சிறிய உணவகத்தில் ஆய்வு என்ற செய்தி வெளியிட்டு, அதன் காரணமாக சம்பந்தமில்லாத அந்த உணவக வணிகம் பாதிக்கப்பட்டதோடு, உணவக உரிமையாளர்களும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு, தொழிலாளர்களும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, ஆய்வுக்குச் செல்லும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உயர் நீதிமன்ற உத்தரவுகளை கண்டிப்புடன் பின்பற்றி, உணவக வணிகத்தை பாதுகாத்து பொதுமக்கள் சேவையில் குறைபாடின்றி உணவகங்கள் செயல்பட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post உணவகங்களில் ஆய்வுக்கு செல்லும்போது உயர் நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article