
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் வடக்கு வாயிலை ஒட்டி பழமையான அரச மரத்தின் கீழ் அஷ்ட நாகர்கள் ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளனர்.
அனந்தன்
நாக தேவதைகளின் அரசன் இவர். பூமியைத் தாங்குபவர். பூமியின் சுழற்சி மையம் என்பதால் இவரை பாலாபிஷேகம் செய்து குளிர்வித்தால் நமக்கு வீட்டு நிலம், விவசாய நிலம் போன்ற எல்லா நிலங்களும் தங்கும் என்பது நம்பிக்கை. புதிதாக இடம் வாங்கி வீடு கட்டுபவர்கள் வீடு, அஸ்திவாரம் தோன்றுதல் முதலான வேலைகள் துவக்குமுன்னர் பால் அபிஷேகம் செய்வித்து ஸ்ரீ அனந்தனை வணங்குகிறார்கள். ஸ்ரீ அனந்தன் இறைவனை வழிபட்டது அனந்தநல்லூர் ஆகும்.
சங்க பாலர், ஸ்ரீ பத்ம பாலர்
இவர்கள் சங்கநிதி, பத்மநிதி என விநாயகர் திருக்கோவிலில் காவல் பொறுப்பாக இருப்பர். விநாயகர் யந்திரத்தில் ஈசானியத்தில் பத்ம பாலரும், அக்கினி மூலையில் சங்க பாலரும் அமர்ந்திருப்பர். வியாபாரிகள் போன்று நாள்தோறும் விநாயகப் பெருமாள் முன் வரவு செலவு கணக்காக ஒப்பிப்பார்கள். எனவே தொழில் வளர்ச்சி வேண்டுவோர் ஸ்ரீ சங்கபாலர், ஸ்ரீ பத்ம பாலருக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கி வலம் வந்தால் வியாபார போட்டிகள் குறைந்து தொழில் வளம் மேலோங்கும் என்பது ஐதீகம். சங்க பாலர் இறைவனை வழிபட்டது சமயநல்லூர் ஆகும்.
ஸ்ரீ வாசுகி
பரம்பொருள் கண்ணன், சிசுபாலனிடம் காப்பாற்றப்பட்டு எடுத்து செல்லப்பட்டபோது அழுத்தம் தாங்காமல் நசுங்கப் பெற்ற வாசுகி பாம்பு 'ஆலாலம்' என்னும் கொடிய விஷத்தை கக்கியது. அப்போது அதைக் கண்டு பயந்த அனைவரையும் காத்தருள வேண்டி, இறைவன் அவ்விஷத்தை அமுதாக உண்டு அனைவரையும் காப்பாற்றினார். வாசுகிக்கும் தன் பழைய நிலை அடையவும், வழித்துணையாக பயணத்தில் பக்தர்களைக் காத்திடுமாறும் இறைவன் அருளினார். எனவே ஸ்ரீ வாசுகியை பாலாபிஷேகம் செய்து வணங்கி வலம் வந்தால் பயணம் பாதுகாப்பானதாக அமையும், வெளியூர், வெளிநாடு பயணம் செய்வோர் இவரை வணங்கி பயணத்தை துவக்கினால் பயணம் இனிதாய் இருக்கும் என்பது ஐதீகமாகும்.
ஸ்ரீ குளிகன்
பித்ருக்களுக்கு உபகாரம் செய்பவராகவும், பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலன் தருபவராகவும் கருதப்படும் ஸ்ரீ குளிகனை பாலாபிஷேகம் செய்வித்து வணங்கி வலம் வந்தால் அகால மரணம், விபத்து முதலிய துன்பத்திலிருந்து தடுத்து நம்மை காத்திடுவார் என்பது நம்பிக்கை.
ஸ்ரீ தட்சன்
இவர் பாம்புகளின் அரசன் ஆவார். தெரிந்தோ, தெரியாமலோ பாம்பை அடித்திருந்தால், பாம்புக்கு தொந்தரவு செய்திருந்தால், சர்ப்ப தோஷத்திற்கு ஆளாகியிருந்தால் ஸ்ரீ தட்சனுக்கு பாலாபிஷேகம் செய்வித்து வணங்கி வலம் வந்து மன்னிப்பு கேட்டால் உடனே மனமிரங்கி மன்னித்து அருளுவார் என்பது முன்னோர் வாக்காகும்.
ஸ்ரீ பத்மன்:
தாமரை தடாகம், மலர் தடாகம், வாச மலர், நந்தவனம், செண்பகம் முதலிய நறுமலர் தோட்டங்களில் காவல் தெய்வமாக இருப்பவர். பூஜைக்காகவும், தெய்வ காரியங்களுக்காகவும் மலர் பறிக்கும் பொழுது இவர் கண்ணுக்கு தெரிய மாட்டார். இவர் பெயரில் பத்மசேரி என்ற ஊர் உள்ளது. இவரை பாலாபிஷேகம் செய்வித்து வணங்கி வலம் வந்தால், நந்தவனம், மலர் தோட்டங்களில் தீங்கின்றி நம்மை பாதுகாப்பார் என்பது பலனாகும்.
ஸ்ரீ கார்கோடன்
சிவபெருமான் அணியும் நாகர் இவரே. இவர் பெயரில் கார்கோடநல்லூர் உள்ளது. இவரை பாலாபிஷேகம் செய்து வணங்கி வலம் வந்தால் சிவனருள் கிடைக்கும் என்பது சிவனடியார்கள் கூற்றாகும்.
நாக சதுர்த்தி, நாக பஞ்சமி
ஒவ்வொரு மாதமும் ஆயில்யம் நட்சத்திரத்தன்று அனந்தன் முதலான எட்டு நாகராஜாக்களுக்கு சிறப்பு வழிபாடுகள், நாக சதுர்த்தி, நாக பஞ்சமி முதலிய விசேஷ நாட்களில் அஷ்ட நாகருக்கு பாலாபிஷேகம், தேனாபிஷேகம் முதலிய பலவிதமான அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெறுகின்றன.
அரச மரத்துடன் சேர்த்து நாகரை சுற்றி வந்து வழிபாடு செய்வதன் மூலம் கால சர்ப்ப தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் பெறுதல், திருமணம் விரைவில் கைகூடுதல், நரம்பு தளர்ச்சி முதலிய வியாதிகள் நீங்கப் பெறுதல் முதலிய பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஸ்ரீ அனந்தன் முதலான அஷ்ட நாகர்களுக்கு பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து வழிபடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.