உடல்நிலை பாதிப்பா..? எதிர்மறையான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஈரான் தலைவர்

2 hours ago 1

தெஹ்ரான்:

ஈரான் நாட்டின் உயர் தலைவராக இருப்பவர் அயதுல்லா அலி காமேனி (வயது 85). இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சில காலமாக உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் தகவல் வெளியானது. அவருக்கு பதில் புதிய உயர் தலைவராக அவரது இரண்டாவது மகன் முஜ்தபா காமேனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் பதவியேற்பார் என்றும் பேசப்பட்டது.

ஈரானில் நடைபெற்ற ரகசிய கூட்டத்தில் நாட்டின் உயர் தலைவராக முஜ்தபா காமேனி தேர்வு செய்யப்பட்டதாக ஒய்நெட் நியூஸ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியை மேற்கோள் காட்டி, ஈரான் இன்டர்நேஷனல் தகவல் வெளியிட்டது. அலி காமேனியின் உத்தரவின்பேரில் செப்டம்பர் 26-ம் தேதி ஈரான் நிபுணர்கள் சபை உறுப்பினர்களின் திடீர் கூட்டம் நடைபெற்றதாகவும் ஈரான் இன்டர்நேஷனல் குறிப்பிட்டிருந்தது. அலி காமேனி கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும் தகவல் பரவியது.

அலி காமேனியின் உடல்நிலை மோசமடைந்ததால் புதிய உயர் தலைவரை தேர்வு செய்யும் பணி ரகசியமாக நடைபெற்று வருவதாக நியூயார்க் டைம்ஸ் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில் நாட்டின் உயர் தலைவரின் உடல்நிலை குறித்த எதிர்மறையான தகவல்கள் ஈரானில் பரபரப்பை ஏற்படுத்தின.

ஆனால், இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தூதரை சந்தித்து பேசியபோது எடுத்த புகைப்படத்தை அலி காமேனி நேற்று தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், லெபனானில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் மூத்த தூதர் முஜ்தபா அமானியை சந்தித்து கலந்துரையாடியதாக அவர் பதிவிட்டிருந்தார்.

ظهر امروز یکشنبه ۲۷ آبان ۱۴۰۳؛ دیدار و گفتوگو با آقای مجتبی امانی، سفیر جانباز جمهوری اسلامی ایران در لبنان pic.twitter.com/ctIRbi9bVA

— KHAMENEI.IR | فارسی (@Khamenei_fa) November 17, 2024
Read Entire Article