உடல்நலக்குறைவால் இளம்பெண் சாவு கடையநல்லூரில் உறவினர்கள் சாலை மறியல்

1 week ago 5

*உடனடியாக பரிசோதனை செய்ய வலியுறுத்தல்

கடையநல்லூர் : மேலக்கடையநல்லூர் வேத கோவில் தெற்குத் தெருவைச் சேர்ந்த முனீஸ்வரனின் மகன் முருகன் (29). ஆட்டோ டிரைவர். இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் காசிதர்மத்தைச் சேர்ந்த வேலையாவின் மகள் மஞ்சுளா (23)‌ என்பவருடன் திருமணம் நடந்தது.

பின்னர் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காசிதர்மத்தில் உள்ள தந்தை வீட்டில் இருந்துவந்த மஞ்சுளாவுக்கு நேற்று முன்தினம் இரவு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்ட கணவர் முருகன், கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றார்.

அங்கு மஞ்சுளாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும் மஞ்சுளாவின் உடலுக்கு 6ம்தேதி பிரேத பரிசோதனை செய்வதாகக் கூறினராம். இதனால் ஆவேசமடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக பிரேத பரிசோதனை செய்ய வலியுறுத்தி கடையநல்லூர் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் முன்பாக திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தெரியவந்ததும் விரைந்துவந்த கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் போலீசார், உறவினர்களை சமரசப்படுத்தினர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் மஞ்சுளாவின் உடலுக்கு உடனடியாக பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மஞ்சுளாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

The post உடல்நலக்குறைவால் இளம்பெண் சாவு கடையநல்லூரில் உறவினர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Read Entire Article