உடல் சோர்வை போக்க மெத்தபெட்டமைன் பயன்படுத்தினேன் மலையாள சினிமாவில் பலருக்கும் போதை பழக்கம் உண்டு: நடிகர் ஷைன் டோம் சாக்கோ வாக்குமூலம்

2 hours ago 1

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் பல நடிகர்கள் போதை பொருள் பயன்படுத்துகின்றனர். ஆனால் என்னையும், இன்னொரு நடிகரையும் தான் அனைவரும் குறி வைக்கின்றனர் என நடிகர் ஷைன் டோம் சாக்கோ போலீசிடம் கூறினார். கேரள போலீசார் கொச்சியிலுள்ள ஒரு ஓட்டலில் சமீபத்தில் போதைப்பொருள் தொடர்பாக சோதனை நடத்துவதற்காக சென்றனர். அங்குள்ள ஒரு அறைக்கதவை தட்டிய போது அந்த அறையில் இருந்த நடிகர் ஷைன் டோம் சாக்கோ பின்புற ஜன்னல் வழியாக குதித்து தப்பி ஓடினார்.

இவர் தப்பி ஓடும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதன்பின்னர் அவர் தலைமறைவானார். இந்நிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி கொச்சி போலீசார் அவருக்கு நோட்டீஸ் கொடுத்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் காலை நடிகர் ஷைன் டோம் சாக்கோ விசாரணைக்காக கொச்சி போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் 3 மணி நேரத்திற்கு மேல் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் ஷைன் டோம் சாக்கோவுக்கு போதைப்பொருள் கும்பல்களுடன் தொடர்பு இருப்பதும், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். விசாரணையில், படங்களில் பிசியாக இருப்பதால் உடல் சோர்ந்து விடக்கூடாது என்பதற்காக மெத்தபெட்டமைன் மற்றும் கஞ்சா ஆகியவற்றை பயன்படுத்தி வந்ததாகவும், எனர்ஜி கிடைப்பதற்காகவே அவற்றை பயன்படுத்தியதாகவும் நடிகர் ஷைன் டோம் சாக்கோ போலீசிடம் தெரிவித்தார்.

மேலும் நடிகை வின்சி அலோஷியசிடம் தான் தவறாக நடக்கவில்லை என்றும், ஈகோ காரணமாகவே அவர் அவ்வாறு தன்மீது புகார் அளித்துள்ளார் என்றும் ஷைன் டோம் சாக்கோ போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த வருடம் போதை மறுவாழ்வு மையத்தில் சில நாட்கள் சிகிச்சை பெற்றதாகவும் இவர் போலீசிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த போதை மறுவாழ்வு மையத்தில் விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்துள்ளனர்.

இவருக்கு பல போதைப்பொருள் கும்பல்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதால் நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அவருக்கு போலீசார் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதற்கிடையே தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி ஷைன் டோம் சாக்கோ கேரள உயர்நீதிமன்றத்தை அணுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ஷைன் டோம் சாக்கோ போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு: மலையாள சினிமாவில் பல நடிகர்கள் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் என்னையும், இன்னொரு நடிகரையும் தான் அனைவரும் குறி வைக்கின்றனர். சினிமா குடும்பத்தை சேர்ந்த ஒரு இளம் நடிகர் போதைக்கு அடிமையானவர் ஆவார். அவருக்காகத் தான் ஆலப்புழாவில் கைது செய்யப்பட்ட தஸ்லீமா சுல்தான் உயர் ரக கஞ்சாவை கொண்டு வந்தார். ஆனால் தேவையில்லாமல் இதிலும் என்னுடைய பெயரை இழுத்துப் போட்டு விட்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post உடல் சோர்வை போக்க மெத்தபெட்டமைன் பயன்படுத்தினேன் மலையாள சினிமாவில் பலருக்கும் போதை பழக்கம் உண்டு: நடிகர் ஷைன் டோம் சாக்கோ வாக்குமூலம் appeared first on Dinakaran.

Read Entire Article