சென்னை : தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியம், தமிழ்நாடு சமையல் மற்றும் உணவகத் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு பாதையோர வணிகர்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நல வாரியம் ஆகிய மூன்று அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களின் கூட்டம் இன்று (06.03.2025) சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் நல வாரிய கருத்தரங்க கூடத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வெ. கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரிய செயலாளர் முனைவர் ஆ. திவ்வியநாதன் வரவேற்றார்.அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கி அவர்களின் நலன் காப்பதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், ஈமச்சடங்கு, விபத்து ஊனம் மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலதிட்ட உதவிகளை 19 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் வாயிலாக தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியம் மற்றும் 18 இதர நலவாரியங்களில் வழங்கப்பட்ட மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1000-லிருந்து ரூ.1,200 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.இவ்வரசு பொறுப்பேற்ற நாள் முதல் 31.01.2025 வரை 19 அமைப்பு சாரா நல வாரியங்களில் 6,00,860 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு சமையல் மற்றும் உணவகத் தொழிலாளர் நல வாரியத்தில் 27,181 பயனாளிகளுக்கு ரூ.31.58 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்நாடு பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் 8,45,120 பயனாளிகளுக்கு ரூ.483.90 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வரசு பொறுப்பேற்ற நாள் முதல் 31.01.2025 வரை 9,57,361 பயனாளிகளுக்கு ரூ.886.94 கோடி மதிப்பபீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக 60 வயது பூர்த்தியடைந்த 1,95,942 ஓய்வூதிய தாரர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றன.
இக்கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் கொ. வீர ராகவ ராவ் இ.ஆ.ப, அவர்கள் தொழிலாளர் ஆணையர் திரு.சி.அ. ராமன் இ.ஆ.ப அவர்கள், வேலையளிப்போர் பிரதிநிதிகள், தொழிலாளர்கள் தரப்பு பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இறுதியாக வாரிய நிர்வாக அலுவலர் திரு.A. ஞானசம்மந்தம் நன்றி தெரிவித்தார்.
The post உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் 9.57 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.886.94 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் கணேசன் தகவல் appeared first on Dinakaran.