உச்சநீதிமன்றம் தீர்ப்பை வரவேற்று பேசிய கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

1 week ago 6

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் அவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக மாண்பமை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதை வரவேற்று சட்டமன்றத்தில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தவிர்த்து, மற்ற கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உரையாற்றியதையடுத்து, சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் அவர்கள் நன்றி தெரிவித்து ஆற்றிய உரையில்;

பேரவைத் தலைவர் அவர்களே, உச்ச நீதிமன்றத்தின் மூலமாக நாம் பெற்றிருக்கக்கூடிய தீர்ப்பினை வரவேற்று நம்முடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறோம். அதேபோன்று, எதிர்க்கட்சியாக இருக்கின்ற அ.தி.மு.க. மற்றும் மத்தியில் ஆட்சி செய்கின்ற பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் தவிர, மற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் மற்றும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இங்கே பாராட்டியும், வாழ்த்தியும் பேசி அந்தத் தீர்ப்பினை வரவேற்று மகிழ்ந்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில், நமது அரசமைப்புச் சட்டத்தில் மாநில சட்டமன்றங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கக்கூடிய உரிமைகளை நிலைநாட்டியதற்கு, தமிழ்நாடு அரசின் சார்பிலும், இங்குள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நம்மைத் தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் சார்பிலேயும் என்னுடைய மனமார்ந்த நன்றியை உச்ச நீதிமன்றத்திற்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவை முன்னவர் அவர்கள் உருக்கத்தோடும், நெகிழ்ச்சியோடும் பேசினார். “தலைவர் கலைஞர் அவர்களின் மடியிலே நான் வளர்ந்தவன்” என்று அவர் சொன்னார். நீங்கள் தலைவர் கலைஞர் அவர்கள் மடியில் வளர்ந்தவர் என்று சொன்னபோது, நான் எண்ணியது, உங்கள் மடியிலே நான் வளர்ந்தவன். ஆகவே, கொள்கையிலே நிச்சயமாக, உறுதியாக இருப்பேன், இருப்பேன், இருப்பேன் என்கிற உறுதியோடு, இந்த மகிழ்ச்சியை நாம் வெளிப்படுத்தக்கூடிய வகையில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களைத் தவிர, மற்ற அனைவரும் மேசையைத் தட்டி நம்முடைய நன்றியைத் தெரிவிக்க வேண்டுகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post உச்சநீதிமன்றம் தீர்ப்பை வரவேற்று பேசிய கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Read Entire Article