உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து பல்கலைக்கழகங்களின் வேந்தரானார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஆளுநர் பதவி நீடிக்குமா?

1 week ago 6

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 10 மசோதாக்களும் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்த நிலையில், ஆளுநர் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக திமுக எம்.பி. தெரிவித்துள்ளார். இதன்மூலம் இனி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே, அனைத்து மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கும் வேந்தராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று திமுக மூத்த வழக்குரைஞர் வில்சன் செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது; ஆர்.என். ரவி, ஆளுநர் பதவியில் அமர்ந்துகொண்டு பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை தடுத்து வந்துள்ளார். எனவே, பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருக்கக் கூடாது, துணைவேந்தர்கள் நியமிப்பதில் மாநில அரசுக்கே அதிகாரம் வழங்க வேண்டும் என்ற மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பியிருந்த நிலையில், அதற்கு தற்போது உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

பல்வேறு மசோதாக்களை தமிழக அரசு அனுப்பியிருந்த நிலையில், அதனை ஆளுநர் கிடப்பில் வைத்திருந்ததால், வழக்குத் தொடர்வதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்து மசோதாக்கள் நிலுவையில் இருப்பதால், ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டாம், உச்ச நீதிமன்றம் தன்னுடைய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாக்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அறிவித்துவிட்டது. அதாவது, அண்ணா பல்கலை., கால்நடை மருத்துவப் பல்கலை. மற்றும் தமிழ்ப் பல்கலை துணைவேந்தர் நியமனத்தில் அரசுக்கு அதிகாரம் வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதனால், வேந்தர் பதவியில் இனி ஆளுநர் நீடிக்க வேண்டிய அவசியமில்லை. பல்கலை வேந்தர் பதவியிலிருந்து ஆளுநர் நீக்கப்பட்டார். இனி, பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிப்பதில் தமிழக அரசுக்கே அதிகாரம் கிடைத்திருக்கிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் காலம் தாழ்த்தக் கூடாது எனவும், மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒரு மாதத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

The post உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து பல்கலைக்கழகங்களின் வேந்தரானார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஆளுநர் பதவி நீடிக்குமா? appeared first on Dinakaran.

Read Entire Article