உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்

4 weeks ago 8

நன்றி குங்குமம் தோழி

உங்கள் இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்கிற நேரத்தில் உங்கள் பெட்ரோல் வாகனம் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்படும். வரியுடன் சேர்த்து இதற்கு 42,500 செலவு செய்தால் போதும். ஒன்றரை மணி நேரத்தில் எலெக்ட்ரிக் வெகிக்கிளாக(EV) மாற்றித் தருவோம். உங்கள் பழைய வண்டிக்கும் புது லைஃப் (Retrofit) என நம்பிக்கை தந்தவர், கோவையில் AR4Tech நிறுவனத்தை நடத்தி வரும் எம்டெக் பட்டதாரியான சிவசங்கரி.

‘‘நமது இந்தியாவில் 230 மில்லியன் இருசக்கர வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. தற்போது ஒரு நாளைக்கு மட்டுமே 6900 வண்டிகள் ஸ்க்ராப்பிற்கு செல்கிற சூழலில் இருக்கிறது. வாகனங்களை ஸ்க்ராப் செய்யாமல் மறு உபயோகத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியே இது.புது வண்டி வாங்குவதைவிட, அடாப்ஷன் சுலபம்’’ என்றவர், ‘‘இன்றைய தேதிக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100ஐ தாண்டிவிட்டது. லிட்டருக்கு மைலேஜ் 50 கிலோ மீட்டர் என்றாலும், இந்த மைலேஜுக்கு பேட்டரி சார்ஜ் செய்ய 1 யூனிட் கரென்ட் மட்டுமே ஆகும்.

வீட்டு உபயோகத்தில் உள்ள மின்சாரத்தை சார்ஜ் செய்ய மேக்ஸிமம் டேரிஃப் ஒரு யூனிட்டுக்கு 10 ரூபாய் என்றாலும், 50 கிலோ மீட்டர் பயணிக்க 10 ரூபாய்தான் இதில் செலவே. பேட்டரியை கையில் கொண்டு போய் வீட்டில் சார்ஜ் போடலாம் என்பதுடன், ஈவியாக மாற்றும் செலவை ஒரே வருடத்தில் எடுத்துவிடலாம்’’ என்றவரிடம், ஆண்கள் கோலோச்சும் வாகன உற்பத்தித்
துறையில், தனியொரு பெண்ணாய் சாதித்து, ஈவி வாகன மாற்றம் செய்வது குறித்துப் பேசியதில்…

‘‘இப்படி மாற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகளிடமிருந்து முறையான அங்கீகாரத்தை நாங்கள் பெற்றிருக்கிறோம். இதற்கான அங்கீகாரத்தை புனேயில் உள்ள ARI (automative research Association of India) மூலம் பெற்றிருப்பதுடன், சாலைகளில் ஓட்டுவதற்கான ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி(ST) அங்கீகாரத்தை, ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் கமிஷனரிடம் பெற்றுள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆர்டிஓவிற்கும் நமது நிறுவனத்தின் அங்கீகாரம் அரசாங்கம் மூலமாகவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஈவியாக மாற்றிய வண்டியை, ஆர்.டி.ஓவில் ரீ ரிஜிஸ்ட்ரேஷன் செய்துதான் க்ரீன் பிளேட்டிற்கு மாற்ற முடியும். நாங்கள் இதுவரை ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜெஸ்ட், சுஸிகி ஆக்ஸஸ், டிவிஎஸ் எக்ஸெல் என 4 மாடல்களுக்கு மட்டும் அங்கீகாரம் பெற்றிருக்கிறோம். ஸ்பிளென்டர் வண்டியை மாற்றுவதற்கான அங்கீகாரம் நடைமுறையில் இருக்கிறது.இருசக்கர வாகனம் தவிர்த்து, நான்கு சக்கர வாகனத்திலும், லைட் கமெர்ஷியல் வெகிக்கிள் செக்மென்டில் டாட்டா ஏஸ், மஹிந்திரா மேக்ஸி மாதிரியான வண்டிகளை எலெக்ட்ரிக் வெகிக்கிளாக கன்வெர்ட் செய்து கொடுக்கிறோம். கூடவே பழைய டாட்டா ஏஸ் வண்டிகளை இன் கேம்பஸ் வாகனங்களாகவும் மாற்றுகிறோம்.

இது தவிர பயணியர் செக்மென்டில், மாருதி 800, டாட்டா நானோ மாதிரியான வண்டிகளையும் கன்வெர்ட் செய்கிறோம். அக்ரிகல்ச்சர் செக்மென்டில் சாதாரண விவசாயிகளும் பயன்பெறும் வகையில், பழைய டிராக்டரையும் கன்வெர்ட் பண்ண ஆரம்பித்திருக்கிறோம்’’ என்ற சிவசங்கரியிடம் அவர் குறித்தும் கேள்வி எழுப்பிய போது…‘‘எனக்கு ஊர் காஞ்சிபுரம். பெற்றோர் இருவரும் நெசவுத் தொழிலாளிகள் என்பதால், நானும் அதே பின்னணியில் பிறந்து, வளர்ந்து, படித்து இந்த இடத்தை அடைந்திருக்கிறேன். எங்கள் குடும்பத்தின் முதல் பெண் பட்டதாரிகள் நானும் என் அக்காவும்.

சென்னையில் ஐ.டி. புரொபஷனலாய் பணியாற்றிய நிலையில், திருமணம், குழந்தை என்றான பிறகு கோவையில் உள்ள எலெக்ட்ரிக் வெகிக்கிள் இஞ்சின் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் இணைந்து பணியாற்றி, குறுகிய காலத்திலே நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் பதவிக்கு உயர்ந்தேன். அதன் பிறகு அந்நிறுவனத்தின் பங்குதாரராகவும் மாறினேன்.7 பேர் கொண்ட அந்நிறுவனம், மூன்றரை ஆண்டுகளில் நன்றாக விரிவடைய, வேறொரு நிறுவனத்திற்கு கைமாற்றிய நிலையில், என் ஷேர்களையும் அந்நிறுவனத்திடம் ஒப்படைத்து, சொந்தமாக ஏஆர்4 டெக் என்கிற இந்நிறுவனத்தை தொடங்கினேன். ஈவி செக்மென்ட்டில் என் இரண்டாவது முயற்சி இது. ஏற்கனவே இதில் அனுபவம் இருந்ததால், என்னால் இதை சிறப்பாகச் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது.

தரிசு நிலத்தை வாங்கி, அதில் கட்டிடத்தை எழுப்பியதில், கட்டிட வேலைக்கு கூலித்தொழிலாளியாக வந்தவர்கள் சிலர், தொடர்ந்து வேலை வேண்டுமெனக் கேட்க ஆரம்பித்தார்கள். அதில் 10 மற்றும் 12ம் வகுப்பு முடிக்காதவர்களையும் ரெட்ரோஃபிட் பயிற்சியில் ஈடுபடுத்தியதில், அனைவரும் 3 மாதத்திலேயே ஆர்வத்துடன் கற்று சிறப்பாக வேலை செய்ய ஆரம்பித்தனர். இன்டென்ஷிப் வருகிற பொறியியல் மாணவர்களுக்கே பயிற்சி வழங்கும் அளவுக்கு இவர்கள் டிரெயின் ஆனார்கள். காரணம், கட்டிங், வெல்டிங், க்ரைண்டிங், டிரில்லிங் இல்லாமலே வண்டியை ஒன்றரை மணிநேரத்திற்குள் சுலபமாக கன்வெர்ட் செய்கிற மாதிரியான கிட் ஒன்றை நாங்கள் தயாரித்துள்ளோம்.

ரெட்ரோஃபிட் பணி செய்பவர்களுக்கு தொழிற் கல்வி அளவுக்கு(ஐடிஐ) தகுதி வேண்டும் என்பதால், அருகில் உள்ள மாலை நேர கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைத்ததில், டிப்ளமோ முடித்து சான்றிதழும் பெற்றதுடன், அங்கு படிக்க வருகிற மாணவர்களுக்கே வகுப்பு எடுக்கும் அளவுக்கு, தங்களின் தகுதியை வளர்த்துக்கொண்டு முன்னேறினார்கள். தற்போது என்னிடம் 8 பெண்கள்வரை வேலை செய்கிறார்கள். எல்லாமே கிராமப்புறங்களில் இருந்து வந்து பணி செய்பவர்கள்’’ என்றவர், தன் நிறுவனத்தில் பணியாற்றிய கூலித்தொழிலாளிகளின் வாழ்க்கையை மாற்றிய கதையினை புன்னகையுடன் விவரித்தார்.

‘‘ரெட்ரோஃபிட் டிரெயினிங் தவிர்த்து, சர்வீஸ் இஞ்சினியரிங், மோட்டார் ஃபிட்டிங், பேட்டரி ரிப்பேர், 4 வீலர் சர்வீஸ் டெக்னீஷியன் கோர்ஸ் என ஈவி தொடர்பான அனைத்து பயிற்சிகளும் மாணவர்களுக்கு இங்கு வழங்கப்படுகிறது. இதற்கான அங்கீகாரத்தையும் தமிழ்நாடு ஸ்கில் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் மூலம் பெற்றுள்ளோம்,காலநிலை மாற்றப் பிரச்னையால் எல்லோரும் ஈவி வெகிக்கிளுக்கு மாறி, கார்பென் புட் பிரின்ட்டை குறைக்க வேண்டும் என்கிற சூழலில், ரெட்ரோ வண்டிகளுக்கு எந்த பைனான்சியரும் ஆதரவு தருவதில்லை’’ என்றவர், ‘‘வாகனங்களை ஈவியாக மாற்றும் அங்கீகாரத்தை அரசாங்கத்திடம் பெற, ஒரு மாடலுக்கு 75 லட்சம் ஆகின்றது. என்னைப் போன்ற தொழில்முனைவோர், எத்தனை மாடல்களுக்கு தனித்தனியாய் பெறமுடியும். அதனால்தான் 4 மாடலுக்கு மேல் என்னால் தாண்ட முடியவில்லை. வண்டியின் பிராசெஸ் மற்றும் சிசி ஒரே மாதிரி இருக்கும் அனைத்து வேரியன்ட் வண்டிக்கும் ஒரே அங்கீகாரமாய் இருந்தால், பலரும் இத்துறைக்குள் கால் பதிப்பார்கள்.

அதேபோல் புது எலெக்ட்ரிக் வாகனத்துக்கு ஜிஎஸ்டி 5 சதவிகிதம். ஆனால் பழைய வண்டியை மாற்ற ஒவ்வொரு பாகத்திற்கும் ஒவ்வொருவிதமான ஜிஎஸ்டி. இதனால் கன்வெர்சன் செலவு கூடுகிறது. ஆர்டி புக் கன்வெர்சனிலும் இந்த நிறுவனத்தின் கிட் என்கிற பதிவு வருவதில்லை. வண்டிக்கான இன்சூரன்ஸிலும் தெளிவில்லை’’ என குறைகளையும் அடுக்கினார்.
‘‘Value to the people… value to the nation… as well by saving the energy என்கிற மோட்டோவோடு நாங்கள் இதை முன்னெடுப்பதால், புதிய மின்சார வாகனங்களுக்கு மானியம் கொடுப்பது போல், மறுசுழற்சி செய்யப்படும் வாகனங்களுக்கும் அரசு மானியம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’’ என்ற கோரிக்கையினை சிவசங்கரி வேண்டுகோளாக முன்வைக்கிறார்.

பெண்கள் தைரியமாக இத்துறைக்கு வரலாம்!

பழைய பேப்பர் வியாபாரிகள், பால்கவர் போடுபவர்கள், விவசாயிகளின் பழைய எக்செல் வண்டிகளை ஈவியாக மாற்றிக் கொடுத்து வருகிறோம். ஒரு மாதப் பயிற்சியிலேயே கன்வெர்ட் செய்யத் தேறினோம். இஞ்சினைக் கழட்ட மட்டுமே இதில் நேரம் எடுக்கும். மற்றபடி பெரிய வேலை எதுவுமில்லை. கட்டிட வேலைக்கு வந்த எங்களை தினக்கூலி போர்வையில் இருந்து வெளியே கொண்டு வந்தது சிவசங்கரி மேடம்தான். வேலையும் கொடுத்து, படிக்க வைத்ததுடன், மாத ஊதியம், பிஎஃப், ஈஎஸ்ஐ போன்றவையும் முறையாக எங்களுக்குக் கிடைக்கிறது. கூலித் தொழிலாளியாக அல்லல்பட்ட எங்களை, ஒரு நிறுவனத்தின் பணியாளர்களாக தலை நிமிரவைத்து, தன்னம்பிக்கை நடைபோட வைத்திருக்கிறார்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: எபினேஷ்

The post உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப் appeared first on Dinakaran.

Read Entire Article