உங்களுக்கு அவர் கடினமாக உழைப்பது தெரியவில்லையா..? - இந்திய வீரர் குறித்து ஹர்பஜன் கேள்வி

2 weeks ago 4

மும்பை,

இந்திய கிரிக்கெட் வீரரான கருண் நாயர் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்து வருகிறார். 6 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 664 ரன்கள் குவித்து அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அதன் காரணமாக அவரை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் இந்திய அணியில் சுமாராக விளையாடும் விராட் கோலி, ரோகித் சர்மாவை ரஞ்சிக்கோப்பையில் விளையாடுமாறு அனைவரும் சொல்வதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் தொடரில் அசத்தும் நாயரை மீண்டும் தேர்ந்தெடுக்காதது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அவருடைய புள்ளிவிவரங்களை நான் பார்க்கிறேன். 2024/25-ல் 6 இன்னிங்சில் 664 ரன்கள் குவித்துள்ள அவர் 5 முறை அவுட்டாகவில்லை. அப்படிப்பட்ட அவரை நீங்கள் எடுக்காதது அநியாயம். இங்கே பல வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் ஓரிரு போட்டிகளில் அசத்துவதால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால் பல போட்டிகளில் அசத்தும் அவரை ஏன் எடுக்கவில்லை?. வித்தியாசமான நபர்களுக்கு வித்தியாசமான விதிமுறைகளா? சுமாரான பார்மில் இருக்கும் விராட் கோலி, ரோகித் சர்மாவை ரஞ்சிக்கோப்பை விளையாடுமாறு சொல்கிறீர்கள்.

ஆனால் ரஞ்சிக்கோப்பையில் அசத்தும் வீரர்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள்? இந்த வீரர்கள் எப்போதுதான் விளையாடுவார்கள். முச்சதம் அடித்த பின்பும் எப்படி அவர் நீக்கப்பட்டார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரைப் போன்ற வீரரை பற்றி யாரும் பேசாதது எனக்கு வலியை கொடுக்கிறது. இந்திய அணியுடன் அவர் இங்கிலாந்துக்கு சென்ற போதிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 5வது போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவிலிருந்து சில வீரர்கள் சென்றார்கள். குறிப்பாக கருண் நாயருக்கு பதிலாக ஹனுமா விகாரி விளையாடினார்.

இதற்கான காரணம் என்ன என்று என்னிடம் சொல்லுங்கள். சுமாராக விளையாடிய வீரர்கள் மீண்டும் ரன்கள் அடிக்கும் போது அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் அல்லவா? அவர் கைகளில் டாட்டூ போட்டுக் கொள்ளவில்லை, விலை உயர்ந்த உடைகளை அணியவில்லை. அதனால்தான் அவரை நீங்கள் தேர்ந்தெடுக்க வில்லையா? உங்களுக்கு அவர் கடினமாக உழைப்பது தெரியவில்லையா" என்று கூறினார்.

Read Entire Article