உங்களுக்காக நான் இருக்கிறேன்; எனக்கு உங்களைத் தவிர வேறு யாருமில்லை: அன்புமணி ராமதாஸ்

4 hours ago 1

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களின் குரலாகவும், ஊமை சனங்களின் பாதுகாவலனாகவும் திகழ்ந்து கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16-ம் தேதி 36 ஆண்டுகளை நிறைவு செய்து 37-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த மகத்தான தருணத்தில் இம்மாபெரும் மக்கள் இயக்கத்தை கட்டி எழுப்பிய மருத்துவர் அய்யா ராமதாசுக்கு வணக்கங்களையும், உலகெங்கும் வாழும் பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சி என்றாலே நினைவுக்கு வருவது சமூகநீதியும், மக்கள் நலனுக்கான போராட்டங்களும் தான். 36ஆண்டுகளுக்கு முன் சமூகநீதிப் போராளி டாக்டர் ராமதாசால் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டதன் நோக்கமே அனைத்து மக்களுக்கும் சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்க வேண்டும்; அனைத்துத் தரப்பு மக்களின் இருக்கும் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்; இழந்த உரிமைகளை மீட்டெடுத்துக் கொடுக்க வேண்டும் என்பது தான். இந்த பாதையில் தான் நமது பயணம் தொடருகிறது.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 36 ஆண்டுகள் ஆகியும் நம்மால் இன்னும் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் இருப்பது பெரும் குறையாகவும், வருத்தமாகவும் இருந்தாலும் கூட, தமிழ்நாட்டு மக்களுக்காகவும், சமூகநீதிக்காகவும் நாம் ஆற்றிய பணிகள் தான் நமது மனதிற்கு நிறைவைத் தருகின்றன. தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும், மக்களுக்காக களத்தில் இறங்கி போராடுவதில் அன்றும், இன்றும் பாட்டாளி மக்கள் கட்சி தான் உண்மையான எதிர்க்கட்சியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், ஓர் அரசியல் கட்சி மக்களுக்கான உரிமைகளை போராடிப் பெற்றுக் கொடுக்கும் நிலையிலேயே தொடர முடியாது.

தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி வலிமையாக வேண்டும். அதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாகத் தான் பாட்டாளி மக்கள் கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, வாக்குச்சாவடி முகவர் குழுக்களை அமைத்தல் ஆகிய பணிகளைத் தொடங்கியிருக்கிறோம். கடந்த மே 30-ம் தேதி அந்தப் பணிகள் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்திருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைய இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடையே பேரெழுச்சி காணப்படுகிறது.

இதை பயன்படுத்திக் கொண்டு உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி முகவர் குழுக்களை அமைக்கும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு கடந்த காலங்களில் சமூகநீதிக்காகவும், மக்களின் பிரச்சினைகளுக்காகவும் நாம் நடத்திய போராட்டங்கள், படைத்த சாதனைகள், மத்திய அரசில் அங்கம் வகித்ததன் மூலம் மருத்துவத் துறையிலும், தொடர்வண்டித் துறையிலும் பாட்டாளி மக்கள் ஆற்றிய பணிகள், தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த திட்டங்கள் ஆகியவை குறித்து விளக்க வேண்டும்.

டாக்டர் ராமதாசின் பிறந்தநாளான ஜூலை 25-ம் தேதி முதல் தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 'தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்' மேற்கொள்ளவிருக்கிறேன். தமிழ்நாட்டைக் காப்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம் எனும் நிலையில், இவற்றை சிறப்பாக செயல்படுத்துவதற்கான உறுதிமொழியை ஏற்றுக்கொள்வது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் 37-ம் ஆண்டு தொடக்கவிழாவில் நாம் அனைவரும் செய்ய வேண்டிய முதன்மைச் செயலாகும். அதுவே திமுக அரசை அகற்றுவதற்கான தொடக்கமாகட்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் 37-ம் ஆண்டு தொடக்கவிழாவை, அனைத்துக் கிளைகளிலும் குறைந்தது ஓர் இடத்திலாவது முறையான அனுமதி பெற்று கொடிக்கம்பம் அமைத்து பாமக கொடியேற்றி கொண்டாட வேண்டும். இந்த நாளில் தொடங்கி 9 மாதங்களில் நாம் மேற்கொள்ளவிருக்கும் பணிகள், மக்களை வதைக்கும் திமுக அரசுக்கு முடிவுரை எழுதும் வகையிலும், அடுத்த ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் 38-ம் ஆண்டு விழாவை ஆளும் கூட்டணிக் கட்சியாக கொண்டாடுவதற்கு தொடக்கவுரை எழுதும் வகையிலும் அமைய வேண்டும். உங்களுக்காக நான் இருக்கிறேன்... எனக்கு உங்களைத் தவிர வேறு யாருமில்லை. நாம் அனைவரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்போம். இது உறுதி.

Read Entire Article