கீவ்,
உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று 990வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவருகின்றன. ஆனால் இருநாடுகளும் பேச்சுவார்த்தைக்கு முன்வராததால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் மீது 120 ஏவுகணைகள், 90 டிரோன்களை ஏவி ரஷியா தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் பல்வேறு மாகாணங்களில் உள்ள மின் உற்பத்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் , டிரோன்கள் பெரும்பாலானவற்றை உக்ரைன் பாதுகாப்புப்படை சுட்டு வீழ்த்தியது. ஆனாலும், சில ஏவுகணைகள், டிரோன்கள் இலக்குகளை தாக்கி அழித்தன.
இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், பெரும்பாலான மின் உற்பத்தி உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.