உக்ரைன் போர்: டொனால்டு டிரம்ப் - ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை

4 hours ago 2

 

வாஷிங்டன்,

உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 119வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக சவுதி அரேபியாவில் கடந்த வாரம் உக்ரைன், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், ரஷியா உடனான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்தது.

அதேபோல், 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ரஷிய அதிபர் புதினும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், போர் நிறுத்தம் தொடர்பாக அவர் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். ஆனால், அந்த நிபந்தனைகளை ஏற்க உக்ரைன் மறுத்துள்ளது. இதனால், உக்ரைன், ரஷியா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதனிடையே, உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் நேற்று தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். 90 நிமிடங்கள் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனின் மின்துறை தொடர்பான உள்கட்டமைப்புகள் மீது 30 நாட்கள் தாக்குதலை நிறுத்தி வைக்க புதின் சம்மதம் தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் இன்று தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். 60 நிமிடங்களுக்குமேல் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் தற்காலிக போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் நல்ல விதமாக இருந்ததாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் உக்ரைன், ரஷியா இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article