உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவிப்பு

3 hours ago 2


அமெரிக்கா: உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. பிரச்னைகளை முடிப்பதற்கு நல்ல தீர்வை எட்ட வேண்டும் என்பதால் ராணுவ உதவிகள் நிறுத்தபட்டுள்ளது. போர் நிறுத்தம் என்ற நோக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதால் முடிவு எடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

போரை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உறுதி இருக்க வேண்டும் என்பதற்காகவும் பிரச்னைகளை முடிப்பதற்கு நல்ல தீர்வு வேண்டும் என்பதற்காகவும் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 1 பில்லியன் டாலர் ஆயுதங்களை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ரஷியா உடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் உறுதியளித்தாக டிரம்ப் நிர்ணயிக்கும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸெலென்ஸ்கி – டிரம்ப் காரசார விவாதம் நடைபெற்று சில நாள்களுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்ததில் இருந்து, அப்போதைய அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசும், மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு உதவிகளை வாரி வழங்கின.

இந்தச் சூழலில், அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், இந்த விவகாரத்தில் ஜோ பைடன் அரசின் கொள்கைகளை அடியோடு மாற்றிமைத்தாா். ரஷியாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைன் மீட்க முடியாது என்றும், உக்ரைனுக்கு நேட்டோவில் இடம் அளிக்கப்படாது என்றும் டிரம்ப் அரசு கூறிவருகிறது.

மேலும், இந்த விவகாரத்தில் முந்தைய பைடன் அரசால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் உரையாடி, அவருடன் உறவைப் புதுப்பித்துக் கொண்டாா். இந்தச் சூழலில், ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு தாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அளித்த உதவிகளுக்குக் கைம்மாறாக, அந்த நாட்டின் அரிய வகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையறை இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வருகிறாா்.

இதற்கு ஒப்புக்கொண்ட உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி, தங்கள் நாட்டுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பமிடத் தயாா் என்று அறிவித்தாா். ஆனால், உக்ரனுக்கு இனியும் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தாா்.

The post உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article