உ.பி-யில் களைகட்டும் மகா கும்பமேளா; அகாடாக்களை சந்தித்து ஆசி பெறும் கோடிக்கணக்கான பக்தர்கள்

1 week ago 2

* 13,000 ரயில்கள், ஹெலிகாப்டர் சவாரி என பிரமாண்டம்
* பாதுகாப்பு பணியில் தமிழகத்தை சேர்ந்த அதிகாரி
* உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு அதிகரிப்பு

ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உத்திரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ், ஹரித்துவார், நாசிக் மற்றும் உஜ்ஜைனியில் உள்ள புனித நதிகளில் கும்பமேளா நடத்தப்படும். இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடக்கும் மகா கும்பமேளாவில் 35 கோடி பக்தர்கள், துறவிகள், பாபாக்கள் பங்கேற்று புனித நீராடுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தங்குவதற்கு 1,60,000 சிறப்பு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மகா கும்பமேளாவிற்கு வரும் பக்தர்கள் புனிதநீராட சங்கம், ராம் காட், பட பிரயாக், நானா கா காட், கிலா காட், ஆசிர்வாத் காட், சங்கர் ஜி கா காட், வங்காள காட், தசாஷ்வமேத் காட், கங்கா துவாரம், விப்ரித் காட், புண்டரீக் க்ஷேத்திரம், இந்திரபுரி காட் என 13 குளித்தலை பகுதிகள் உள்ளன.

பொதுவாக பக்கதர்கள் கடல் அல்லது ஆறுகளில் புனிதநீராடிய பிறகு கோயிலுக்கு செல்வார்கள். ஆனால் கும்பமேளா நடைபெறும் இடத்தில் கோயில் இல்லாத காரணத்தால் பக்தர்கள் பிரயாக்ராஜில் உள்ள அகாடாவிற்கு (மடம்) சென்று ஆசி பெறுகிறார்கள். மொத்தம் 13 அகாடாக்கள் உள்ளன. இந்த 13 அகாடாக்கள் சைவம், வைணவம், உதாசின் என மதவழிப்பாட்டின் அடிப்படையில் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அகாடாவிலும் ‘ஆச்சார்யா மகாமண்டலேஷ்வர்’ (தலைவர்) தலைமையில் ஆயிரக்கணக்கான பாபாக்கள், துறவிகள் இருக்கின்றனர். பெரிய அகாடாவான ஜூனா அகாடா மற்றும் நிரஞ்சனி அகாடாவில் 50,000-100,000 உறுப்பினர்கள் இருப்பார்கள். 6,000 ஹெக்டேர் பரப்பளவில் நடைபெற்று வரும் கும்பமேளா 25 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 16, 20, 18, 19 பகுதிகள் அகாடாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் லட்சக்கணக்கான பாபாக்கள், துறவிகள் இருப்பார்கள்.

அங்கு பக்தர்கள் சென்று ஆசி பெறுகின்றனர். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடலுக்கு பிறகு அகாடாவில் இருக்கும் பாபாக்களை பார்க்க செல்வதால் பாதுகாப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக 2,750 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் கூட்டத்தை கண்காணிக்க ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.பி.ஜி. என்ற பாதுகாப்பு படையை தவிர அனைத்து வகையான பாதுகாப்பு காவல் படைகளும் கும்பமேளா நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக பிரயாக்ராஜ் காவல் துறை கூடுதல் ஆணையர் தமிழ்நாட்டை சேர்ந்த கொளஞ்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கொளஞ்சி கூறியதாவது: மகா கும்பமேளா என்பதால் பிரயாக்ராஜ் தற்காலிகமாக மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட அந்தஸ்து பெற்றதால் கூடுதல் வசதி மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரயாக்ராஜ் நகரில் இந்த முறை மகா கும்பமேளா நடப்பதால் வழக்கமாக வரும் பக்தர்களைவிட அதிகமாக கூடுவார்கள். எனவே பாதுகாப்பு பணி முதலில் சவாலாக இருந்தது. ஆனால் திட்டமிட்டு அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாப்பு பணிகள் வழங்கப்பட்டுள்ளன. கிட்டதட்ட 60,000 மேற்பட்ட பாதுகாப்பு துறையை சேர்ந்தவர்கள் பணியில் உள்ளனர். பிரதமருக்கு வழங்கப்படும் எஸ்.பி.ஜி என்ற பாதுகாப்பு படையை தவிர அனைத்து வகையான பாதுகாப்பு காவல் படைகளும் கும்பமேளா நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக பக்தர்கள் நீராடும் 25 குளித்தலை பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறோம். தொடர்ந்து சிசிடிவி மூலம் கண்காணித்து வருகிறோம். தற்போதுவரை எந்த பிரச்னையும் இல்லை. பொதுமக்களும் அரசுக்கு மதிப்பளித்து கும்பமேளாவில் நீராடி விட்டு செல்கிறார்கள்.

கூட்டம் அதிகமாக வருவதால் போக்குவரத்து சில இடங்களில் தடைபடும், இருப்பினும் மக்கள் புரிந்து கொண்டு வந்து செல்வதால் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. போலீசாரும் அவர்களுக்கு வழிகாட்டியாக செயல்படுவதால் அமைதியான முறையில் நீராடி விட்டு செல்கிறார்கள். இது எங்களுக்கு மிகுந்த மனநிறைவு தருகிறது. இனிவரும் நாட்களிலும் அதுபோன்று தொடர நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். நேற்று மட்டும் 3.90 கோடி மக்கள் என மொத்தம் இதுவரை 14.76 கோடி மக்கள் புனித நீராடி உள்ளனர். மேலும் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அங்கு தங்கி உள்ளனர். அத்துடன் இன்று மவுனி அமாவாசை என்பதால் 10 கோடி மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மகா கும்பமேளாவிற்காக சிறப்பு ஏற்பாடு
மகா கும்பமேளாவிற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கங்கை மற்றும் யமுனை ஆற்றின் கரைகளை இணைக்கும் 30 மிதவைப் தற்காலிக பாலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மிதவைப் பாலம் காலி இரும்பு உருளைகளை ஒன்றுடன் ஒன்று இரும்பு கயிற்றால் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மீது மரப்பலகைகள் அடுக்கி வைக்கப்பட்டு பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்ட தண்ணீர் ஏடிஎம்கள் நிறுவப்பட்டு, தினமும் 12,000 முதல் 15,000 லிட்டர் வரை தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

அகாடா வகைகள் என்னென்ன?
ஜூனா அகாடா, ஆவாஹன் அகாடா, அக்னி அகாடா , நிரஞ்சனி அகாடா , ஆனந்த் அகாடா, அடல் அகாடா ஆகிய அகாடாகள் சைவ அகாடா (சிவ பக்தர்கள்) என்று அழைப்பார்கள். நிர்மோனி அகாடா , நிர்வாணி அகாடா, திகம்பர் அகாடா ஆகிய அகாடாகள் வைஷ்ணவ அகாடா (விஷ்ணுவின் பக்தர்கள்) என்று அழைப்பார்கள். நயா உதாசின் அகாடா, படா உதாசின் அகாடா ஆகிய உதாசின் அகாடா (ஒருங்கிணைந்த பாரம்பரியத்தை பின்பற்றும் துறவிகள்) என்று அழைப்பார்கள். இதைத்தவிர,  பஞ்சாயத்து அகாடா பட உதாசின்,  பஞ்சாயத்து அகாடா நயா உதாசின் என 2 அகாடாக்கள் தனியாக உள்ளன.

ரயில்வே துறை சிறப்பு ஏற்பாடுகள்
மகா கும்பமேளாவிற்கு வந்து செல்லும் வகையில் 9 ரயில் நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 13,000 ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் 24 ரயில்கள் தமிழ்நாட்டில் இருந்து இயக்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமானால் அவர்கள் தங்கி செல்வதற்கு ரயில் நிலையத்தில் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 22 மொழிகளில் தகவல் அளித்து வருகிறோம். 13,000 ரயில்வே காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர் என வடக்கு மத்திய ரயில்வே அதிகாரி சசிகாந்த் திரிபாதி தெரிவித்தார்.

கும்பமேளாவில் விதவிதமான பாபாக்கள்
தலையில் ஒரு புறா 24 மணிநேரமும் அமர்ந்திருக்கும் புறா பாபா, முள்களை கொட்டி அதன்மீது படுத்துக் கொண்டிருக்கும் முள் பாபா, 3 அடி மட்டுமே உயரம் கொண்ட சோட்டு பாபா, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக கை தூக்கி கொண்டு இருக்கும் கைதூக்கி பாபா, ஐஐடி பாபா என பல்வேறு வகையான பாபாக்கள் கும்பமேளாவில் உலா வந்து பக்தர்களுக்கு ஆசி
வழங்குகின்றனர்.

ஹெலிகாப்டர் சவாரி
மகா கும்பமேளாவில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஹெலிகாப்டர் சவாரி மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ1,296 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வானத்தில் இருந்து கும்பமேளா நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ளலாம். அதேபோல பாராகிளைடிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரயாக்ராஜ் வாசிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு
மகா கும்பமேளா நடைபெறுவதால் பிரயாக்ராஜ் உள்ளூர் மக்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. குறிப்பாக மற்ற மாவட்டம் அல்லது மற்ற மாநிலத்தில் இருந்து வரும் பக்தர்கள் புனிதநீரை பாட்டிலில் எடுத்துச் செல்கின்றர். எனவே பாட்டில் விற்பனை அதிக அளவில் இருக்கிறது. விலை ரூ20ல் இருந்து ரூ200 வரை விற்பனை செய்கின்றனர். மேலும் பானிபூரி விற்பனை, பாவ்பாஜி விற்பனை என உள்ளூர் மக்களுக்கு அதிக வியாபாரம் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பக்தர்களை கண்காணிக்க ஏஐ தொழில்நுட்பம்….
பிரயாக்ராஜ் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏராளமான போலீஸார், அதிகாரிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு சதுர மீட்டருக்குள் எத்தனை பக்தர்கள் உள்ளனர் என்பதை எல்லாம் ஏஐ தொழில்நுட்பம் மூலம் கணக்கிட்டு வருகின்றனர். அத்துடன் களத்தில் இருந்தும் பக்தர்களின் எண்ணிக்கை குறித்து தகவல்கள் பெறப்படுகின்றன. மேலும் 1 கிமீ வரம்பிற்குள் உள்ள வாகனம் நிறுத்தும் இடம், உணவு, நீதிமன்றங்கள் மற்றும் மருத்துவமனைகள் பற்றிய துல்லியமான தகவலை வழங்க ஏஐ சாட்போட் வழங்குகிறது.

The post உ.பி-யில் களைகட்டும் மகா கும்பமேளா; அகாடாக்களை சந்தித்து ஆசி பெறும் கோடிக்கணக்கான பக்தர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article