லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செக்டார் 18 மற்றும் 19 இடையே திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்புஏற்பட்டது.
செக்டார் 18 மற்றும் 19 க்கு இடையில் பல பந்தல்கள் திடீரென தீப்பிடித்தன. இந்த சம்பவத்திற்கு ஷார்ட் சர்க்யூட் மின்னழுத்தம் காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையால், தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மாலை 5:45 மணியளவில் செக்டார் 19 ல் உள்ள மோரி மார்க்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வாகனங்கள் 10 நிமிட போராட்டங்களுக்கு பின் தீயணைக்கப்பட்டது. நல்வாய்ப்பாக இந்த தீ விபத்தால் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த தீ விபத்து காரணமாக, அயோத்தி தாமின் லவ்குஷ் ஆசிரமம் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது.
கடந்த சில நாட்களில் மஹாகும்பமேளா பகுதியில் நடந்த நான்காவது தீ விபத்து இதுவாகும். பிப்ரவரி 7 ஆம் தேதி, செக்டார் 19 இல் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அதில் பல கூடாரங்கள் எரிந்து சாம்பலாயின. பிப்ரவரி 9ம் தேதி, சிலிண்டர் கசிவு காரணமாக செக்டார் 9 இல் உள்ள கல்ப்வாசி கூடாரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பிப்ரவரி 13 ம் தேதியும், இரண்டு வெவ்வேறு மண்டலங்களில் தீ விபத்துகள் நிகழ்ந்தன.
The post உ.பி. மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து appeared first on Dinakaran.